சிங்களச் சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பான திருமதி பெரேராவில் பத்துக் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.இஸுரு சாமர சோமவீர தொகுத்த இரு தொகுப்புகளிலிருந்து கதைகளைத் தேர்ந்தெடுத்து எம்.ரிஷான் ஷெரீப் மொழிபெயர்த்திருக்கிறார்.மொழிபெயர்ப்பின் இடைஞ்சல்களின்றி நாம் படிக்க முடிகிறது. இத்தொகுப்பின் தலைப்பான திருமதி பெரேரா தான் எனக்கு மிகவும் பிடித்த கதை.

சில மணிநேரங்கள் தான் கதை நடக்கிறது.அதற்குள் ஒரு பெண்ணின் வாழ்வு எழுதப்பட்டுள்ளது. மீனும் பிஸ்கட்டும் குளியலுமாக வீட்டுக்குள் சுதந்திரமாக நடமாடும் பூனைபோல தான் திருமதி பெரேராவும் அவ்வீட்டில் வாழ்கிறார்.’ஒரு பெண் பூனைக்கு இன்னும் வேறு என்னதான் வேண்டும்?’ என்ற வரி திரு பெரேராவின் எண்ணத்தின் வெளிப்பாடு. திரு.பெரேரா படுக்கையில் இறந்துவிட்டால் அதை எப்படி எதிர்கொள்வதென்று திருமதிபெரேரா யோசனை செய்யும் விசயங்களை…இஸுரு ஒரு பெண்ணாக எப்படிக் கற்பனை செய்து எழுதினார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது. திருமதிபெரேரா கண்ணாடியில் முகத்தை அழுமூஞ்சியாகத் தோற்றுவித்துப் பார்க்கிறார்,இப்ப அழ வேண்டாம், முதலில் எந்தப் பக்கத்து வீட்டாரை அழைப்பது, மகன் வந்து மரணச் சடங்கிற்காகத் தங்கி நிற்கும் நாட்கள், செலவுக்குக் காசு, தான் உடுத்தும் உடைகள், சவப்பெட்டியில் கறுப்புக் சூட்டில் பெரேரா…இப்படியாகப் பலவும் சிந்தித்தபடி படுக்கையில் அசையாமல் கிடக்கும் கணவன் செத்திருப்பதான கற்பனையில் சமையலும் செய்து குளித்து முடிக்கிறார். விருப்பமல்லாத கல்யாண வாழ்வை சகல வசதிகளோடும் வாழ்ந்த சலிப்பில் இப்படியெல்லாம் நினைத்துக் கொள்கிற பெண்பற்றிச் சிலருக்குக் கற்பனையும் செய்ய முடியாததாயிருக்கும்.கடைசியாக,கட்டிலில் எழுந்திருந்து தேநீர் குடித்துக் கொண்டிருக்கும் பெரேராவைப் பார்க்கும் போது… நான் தான் அதிர்ச்சியடைந்தேன். ஆனால் குணவங்சலாகே ஸ்ரியானி பத்மகாந்தி சோமரத்ன என்ற திருமதி பெரேரா சற்றும் திடுக்கிடவில்லை. அப்படிப் பல தடவைகள் எதிர்பார்த்து ஏமாந்தவர் போல மிகச் சாதாரணமாக அக்காட்சியை எதிர்கொள்கிறார். எதிர்க்க வழியில்லாதபோது, வலுவில்லாதபோது பலவீனர்களால் என்ன செய்ய முடியும்?

பெரோராவின் சாவின் மூலமாகவாவது தனக்கான வாழ்வைக் கண்டடைய முடியாதா என்ற ஏக்கம் கொண்ட திருமதி பெரேரா.நீலப் பூச் சட்டை கதையும் ஒரு பெண்ணின் உணர்வுகளை வெகு சிறப்பாக உள்வாங்கிய எழுத்தின் வெளிப்பாடு. நினைவுகளைச் சில அடையாளங்களைக் கொண்டு புதுப்பிக்கலாம். உறவைப் புதுப்பிக்க வாங்கிய நீலப் பூச் சட்டை கடந்த காலத்தின் வாசனையைக் கொண்டதாக இல்லை. கதைகளைப் படித்துக்கொண்டு போகும் போது அழகழகான சிங்களப்பெயர்களை இரசித்தேன் என்பதையும் குறிப்பிடவேண்டும்.

கிராஞ்சி கதையில் தமிழ்த்தாயின் துயரமும் காணாமலாக்கப்பட்டவர்கள், கொல்லப்பட்டவர்களும். மறுபக்கமாக வறிய குடும்பத்துப் பிள்ளைகள் பிக்குவாகவும் இராணுவமாகவும் ஆகவேண்டிய சூழ்நிலைகள் என்று நாட்டில் நடந்த சண்டைகளின் விளைவுகளை எதிர்கொள்ளும் மனிதர்கள். குற்றவுணர்வும் புரிந்து கொள்ளலுமாக ஒரு மெல்லிய நுாலாக உறவைக்கட்ட முனையும் கதை. ஆனால் கதையின் வடிவம் ,சொல்முறை தொகுப்பில் ஏனைய கதைகளை விட இதில் சிறப்பாக அமையவில்லை என்று எனது வாசிப்பில் தோன்றியது. இது முதலாவது கதையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.

நீரணங்குத் தீரம்,நிமாலிக்கு ஆகிய கதைகள் சமபால் உறவாளர்களது பிரச்சினைகளை உள்வாங்கியவையாக எழுதப்பட்டவை.திரும்பத்திரும்ப இவற்றை எழுதியும் உரையாடியும் தான் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். நிமாலிக்கு என்ற கதை எளிமையாகவும் நேரடியாகவும் சமபால் ஈர்ப்புக்குரியவர்களது மனநிலையையும் பிரச்சினைகளையும் வெளிப்படுத்தும் விதமானது. இக்கதைகளைப் படிக்கும்போது கொன்று தின்னும் மிருகங்களுள்ள காட்டுக்குள் தனியே நடமாடுவது போல, உலகில் ஆண்களால் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் திருநர்கள், சமபாலுறவாளர்கள்,பெண்கள்,குழந்தைகளின் நிலை என்று திகில் ஏற்படுகிறது.

நாம், உலகின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரையாக உலக இலக்கியங்களை மொழிபெயர்த்துப் படிக்கும் தமிழ் வாசகர்கள். பக்கத்தில் வாழும் அல்லது வாழ்ந்த சிங்களச் சமூகத்தோடு உறவாடாதவர்கள் பலர்.ஒருவருக்கொருவர் வாழ்வையறியாதவர்களாக, இலக்கியத்தைப் படிக்காதவர்களாக, சனங்களின் மத்தியில் இன்னும் வெறுப்பை வளர்க்கும் நிலையில் இது போன்ற மொழிபெயர்ப்புச் செயற்பாடுகள் அவசியமாகிறது. சிங்களத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து சிங்களத்திற்குமாக இலக்கியம் பரிமாறப்படவேண்டும். அரசியல்வாதிகளும், திட்டமிட்டே இலங்கைத் தீவில் குழப்பத்தை ஏற்படுத்திய சுயநலமான பிற நாடுகளும், ஆயுத முகவர்களும் அழிவுகளில் மகிழும் போர்வெறியர்களும் சனங்களுக்கு வெறுப்பையும் அழிவுகளையும் தான் ஏற்படுத்தினார்கள்.உண்மையான அமைதியையும் நிம்மதியான வாழ்வையும் நீதியையும் தான் எளிய மக்கள் விரும்புகிறார்கள் என்ற கருத்தை மானுட நேசிப்பை முன் வைக்கும் எழுத்தாளர்களும் கலைஞர்களும் தான் அவ்வப்போது மனச்சாட்சியுடன் பதிவுசெய்கிறார்கள்.
வெளியீடு :ஆதிரை பதிப்பகம்

-தர்மினி- 13.02.2021

54Venky Thillainayagam, Sharmila Seyyid and 52 others2 Comments15 SharesLikeCommentShare