1.

அன்று முதலாக இருந்த ஒன்றே
இன்று கடைசியானது.
ஆகச் சிறந்ததாயிருந்தது
அளவிட முடியாத வெறுப்பைப் பெறுகிறது.
அருகில் மினுங்க ஆசைப்பட்ட ஒளித்துண்டொன்று
சுட்டுவிடுகிறது
குளிர்ந்த வெளிச்சமாகக் கைகளில் பொதிந்து கொண்டால்
விரல்களின் இடைவெளிகளால் வழுகிச்செல்கிறது
வளைந்து குழைந்த சொற்கள்
கல்லாகவும் இரும்பாகவும் இறுகின
அதிர்வுகளை எழுப்பும் நினைவுகள்
கற்பனைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளில்
கூர் பார்த்து வெட்டுகின்றன
குரூரக் காற்றில்
இதோ வருகிறது கன்றிப்போன காலம்
படக்கென்று சிறகுகளை அடித்துவிட்டு
நீரில் மூழ்குகிறது பறவை
அது கௌவிய மீனின் வால் துடிக்கிறது
வானம் அதே அமைதியின் நீலம்

2.
மென்பச்சைக்காலம்

நானும் மகனும் அடித்துத் துரத்தி விளையாடிய
அன்றொரு நாள்
திடுக்கிட்டு நின்றேன்
காலம் மென்பச்சையில் தெரிந்தது.
கோபமா நேசமா?
சிறுவயதில் நேசத்தின் விரல்கள் அடிக்கடி நீளும்
கொஞ்சம் வெட்கத்தோடு தான்
சினேகித விரல்களைப் பற்றுவோம்.
ஆலயத்தில் இடமும் வலமும்
திரும்பித்திரும்பிச் சமாதானம்…சமாதானம்
அது பழக்கப்பட்டது
சும்மா ஒரு வழக்கம்.
பிறகு
நேசம் போடுவது
சமாதானத்திற்குப் பேச்சு வார்த்தை
பாவத்திற்குப் பயந்த பராயம்
வேகவேகமாகக் கடந்து போகிற பயணம்
உண்மையாகவே பெரியவர்களாகத்தான் ஆனோமா?
திடுக்கிட்டுப்போனேன்
ஒரு காலம் மென்பச்சையில் தெரிந்தது
நண்பனுக்கு நாற்பத்தைந்து வயது
எனக்கொன்று அதிகம்.
ஒன்றரை மாதமாகச் சண்டையென்று பேச்சு வார்த்தையில்லை.
நான்கு நாட்களின் முன்புதான்
‘சமாதானம்’ என்றொரு சொல் வந்தது
எனக்கென்றால் குழந்தைப்பிள்ளைகள்போல
நேசம் போட்ட வெட்கச் சிரிப்பு.

தர்மினி

நன்றி: அம்ருதா (மே 2021)