இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதில்லையா?

மாட்டிறைச்சி உண்ணுதல் மற்றும் இந்து சமயம் பற்றி….                    –டாக்டர் அம்பேத்கர்- 
தமிழில் : வி.சிந்துகா

ambedkar1

ந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதில்லையா? என்ற கேள்விக்கு பார்ப்பனர்களாகவோ அல்லது பார்ப்பனர்கள் அல்லாதவர்களாகவோ இருக்கக்கூடிய தீண்டப்படாதோர் அல்லாத இந்துக்கள் ‘இல்லை, ஒருபோதும் இல்லை’ என்று கூறுவார்கள். ஒரு வகையில், அவர்கள் கூறுவது உண்மையும் தான். நீண்டகாலமாக இந்துக்களிடம் மாட்டிறைச்சி உண்ணும் வழக்கம் இல்லை.  எனவே இந்துக்களிடம் மாட்டிறைச்சி உண்ணும் வழக்கமில்லை என்கிற தகவலாக மட்டும் தீண்டப்படாதோர் அல்லாத இந்துக்கள் இதனைக் கூறுவார்களாயின் அது குறித்த விவாதங்களுக்கு எந்தத் தேவையும் எழாது.  ஆனால்,  பார்ப்பனர்கள், இந்துக்கள் ஒருபோதும் மாட்டிறைச்சி உண்டதில்லை என்பதுடன் அவர்கள் எப்போதும் பசுக்களைப் புனிதமாகக் கருதினார்கள் என்றும் பசுவதைக்கு எதிராகவே எப்போதும் இருந்தவர்கள் என்றும் விவாதிப்பார்களாயின் அவர்களது வாதத்தினை ஏற்பது சாத்தியமற்றது.

இந்துக்கள் ஒருபோதும் மாட்டிறைச்சி உண்டதில்லை என்பதற்கும் பசுவதையினை எதிர்ப்பவர்கள் என்பதற்கும் உறுதியளிக்கின்ற வகையில் என்ன ஆதாரம் இருக்கிறது? ‘இருக்கு’ வேதத்தில் உள்ள இரண்டு தொடர்களை இதற்கான சான்றாகச் சுட்டிக்காட்டுவதுண்டு.  அவற்றில் ஒன்றில், பசுக்கள் அஹ்ன்யா (Aghnya) என குறிப்பிடப்பட்டுள்ளன.  அதாவது, பசுவானது வதைக்கப்படவோ காயப்படுத்தப்படவோ கூடாதது என்பது இதன் பொருளாகும். இதனை இருக்கு வேதத்தின் 1.164, 27; IV.1.6; V 82-8; V11.69. 71; X.87.  இல்  காணலாம். இதிலிருந்து, பசுவதையானது தடைசெய்யப்பட்டிருந்ததாகவும் வேதங்களே இந்துசமயத்தின் உச்சபட்ச நெறிமுறைகளை விதிப்பனவாக இருந்தமையால், ஆரியர்கள் பசுக்களை வதைத்திருக்க முடியாது என்று தெரிவதால் அவர்கள் மாட்டிறைச்சியினை உண்டிருக்கும் சாத்தியம் மிக மிகக் குறைவானதாகவே இருந்திருக்கவேண்டும் என்கிற வாதம் முன்வைக்கப்படுகின்றது.  இருக்கு வேதத்தின் V1.28.1.8. மற்றும்  VIII, 101. 15. பிரிவுகளைக் கொண்டிருக்கின்ற மற்றொரு தொடரில், பசுக்கள் புனிதமானவையாகக் கூறப்பட்டிருக்கின்றன.  இவ்வசனங்களில், பசுவானது உருத்திரர்களின் தாயாகவும் வசுக்களின் மகளாகவும் ஆதித்யர்களின் சகோதரியாகவும் இறவாமையைத்தரும் மையமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு சான்றாதாரம் இருக்கு வேதத்தின் VIII. 101. 16 இல்  உள்ளது. அதில், பசு தேவி (பெண் தெய்வம்) என அழைக்கப்படுகிறது. இதை ஒத்த நம்பிக்கைகள் பிரமாணங்கள் மற்றும் சூத்திரங்களில் உள்ள குறித்த சில பந்திகளிலும் உள்ளன.

மிருகவதை மற்றும் மாட்டிறைச்சி உண்ணுதல் தொடர்பான சதபத பிரமாணத்தில் இரு பந்திகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் 111.1.2.21 குறிப்பிடப்படுவது பின்வருமாறு:

‘அவர் (அத்வர்யு- பார்ப்பனரில் ஒரு வகை) , பின்னர்  மண்டபத்துக்குள் நுழைகிறார். அவரை பசுவினதோ காளையினதோ இறைச்சியை (மாமிசம்) உண்ணவிடவில்லை, ஏனெனில், பசுவும் காளையும் சந்தேகமே இல்லாதவகையில் பூமியிலுள்ள எல்லாவற்றுக்கும் உதவுகின்றன. தேவர்கள் சொன்னார்கள், ‘நிச்சயமாக பசுவும் காளையும் இங்குள்ள எல்லாவற்றுக்கும் ஆதரவளிக்கின்றன: வாருங்கள், நாங்கள் அவற்றுக்கு அருளளிப்போம். மற்றும் ஏனைய வகையான உயிரினங்கள் (மிருகங்கள்) சக்தி வாய்ந்தவையாக இருப்பதினால் அவை பசு மற்றும் காளையை அதிகம் வேட்டையாடுகின்றன, பசுவும் காளையும் இவ்வாறே அழிந்து போக நேரிடுவதனால், அவர் பசுவினையும் காளையையும் (மாமிசம்) உண்ண வேண்டாம்.’

மற்றைய பந்தி 1, 2, 3, 6 இல் காணப்படுகிறது. அது ஒழுக்க நெறிமுறை அடிப்படையிலான மிருகவதைக்கு எதிராக விடயங்கள் தொடர்பாக பேசுகிறது. இதனை ஒத்தகூற்று ஒன்று அபஸ்தம்பா தர்ம சூத்திரத்தின் (Apastamba Dharma Sutra) 1, 5, 17, 29 இல் உள்ளது. அபஸ்தம்பா  பசுவின் மாமிசம் உண்ணுதலை தடைசெய்யும் சட்டம் ஒன்றினைப் பிரகடனப்படுத்தினார்.

இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை என்ற கருத்துக்கு ஆதாரமாக  அமைபவை இவையே.  இந்த ஆதாரங்களில் இருந்து என்ன முடிவுகளுக்கு வர முடியும்?

இருக்கு வேதத்திலிருந்து கிடைக்கப்பெற்றிருந்த முடிவுகள் நூல்கள் தவறாக வாசிக்கப்பட்டமையையும் புரிந்து கொள்ளப்பட்டமையையும் அடிப்படையாகக் கொண்டிருக்கலாம் என்ற ஐயம் இன்றுவரை இருக்கிறது. இருக்கு வேதத்தில் அஹ்ன்யா எனும் அடைமொழியுடன் வதை செய்யப்படக்கூடாது என்று குறிப்பிடப்பட்ட பசுவானது பால்தரும் பருவத்தில் இருக்கின்ற பசுவேயாகும்.  பால்தரும் பசுவானது இருக்கு வேதத்தில் வழிபாட்டுக்குரியதாக இருந்தது உண்மையே.  ஆனால், அவ்விதம் பூசிக்கும் மரபு இந்தோ-ஆரியர்கள் போன்ற விவசாயக்குடிகளிடமே இருந்தது.  ஆனால் இந்த வழக்கம் நிலவியபோதும் கூட ஆரியர்கள் பசுக்களை உணவுக்காகக் கொல்வதைத் தடுக்கமுடியவில்லை. உண்மையில், பசுக்கள் புனிதமானவையாக கருதப்பட்டமையாலேயே கொல்லப்பட்டிருக்கின்றன.  திரு. கேன் (Mr. Kane) அவர்களால் அவதானிக்கப்பட்டபடி வேத காலங்களில் பசு புனிதமற்றதாகக் கருதப்பட்டது என்று பொருளல்ல, பசுவின் புனிதத்துவத்தின் காரணமாகவே மாட்டிறைச்சி உண்ணப்பட வேண்டும் என வஜசனேயி சம்ஹிதா (Vajasaneyi Samhita)  இல் உத்தரவிடப்பட்டுள்ளது. (மராத்தியிலுள்ள தர்ம சாஸ்திரம் விசார், ப. 180).

இருக்கு வேதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த ஆரியர்கள் உணவுக்காக பசுக்களை வதைத்தனர் என்பதும் மாட்டிறைச்சி உண்டார்கள் என்பதுவும் இருக்கு வேதத்திலேயே மிகத் தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றது.  இருக்கு வேதத்தில் (x. 86.14) இந்திரன் கூறுகிறான்: “அவர்கள் ஒருவேளை உணவுக்காக 15 முதல் 20 வரையான காளைகளைச் சமைத்திருக்கிறார்கள்.” குதிரைகள், எருதுகள், காளை மாடுகள், கருவுறாத பசுக்கள்,  ஆட்டுக்கடாக்கள் என்பன அக்கினி தேவனுக்காகத் தியாகம் (மிருக பலி) செய்யப்பட்டன என இருக்கு வேதம் (X.91.14) கூறுகிறது. பசுக்கள் வாளினால் அல்லது கோடரியினால் கொல்லப்பட்டிருப்பது இருக்கு வேதத்திலிருந்து தெரியவருகின்றது (X.72.6).

எனவே சதபத பிரமாணத்தில் குறிப்பிடப்படுவதைச் சாட்சியாகக்கொண்டு நாம் பசுவதையும் மாட்டிறைச்சி உண்ணுதலும் தடைசெய்யப்பட்டிருக்கின்றன என்கிற முடிவுக்கு வந்துவிடமுடியாது.  மற்றைய பிரமாணத்திலுள்ள  பந்திகள் வேறு ஒரு கருத்தினை வழங்குகின்றன. உதாரணமாக, தைத்திரிய பிரமாணத்தில் வகுக்கப்பட்டுள்ள கம்யஸ்திகள் (Kamyashtis) பசுக்கள் மற்றும் காளைகளை பலியிடுவது மட்டுமல்ல, எந்த வகையான பசுக்கள் மற்றும் ஆடுகள் எவ்வகையான தெய்வங்களுக்கு பலியிடப்பட வேண்டும் எனவும் வகுத்துள்ளனர். அதனால், விஷ்ணுவுக்குக்  குள்ளமாக உள்ள காளையையும் விருத்திராசூரனை வதம் செய்ததால் இந்திரனுக்கு தொங்குகின்ற கொம்பு உள்ளதும் நெற்றியில் குறியுள்ளதுமான காளையையும் சூரியபகவானுக்கு (Pushan) கருப்புநிற பசுவும் உருத்திரனுக்கு சிவப்புநிற பசுவும் பலியிடப்பட்டிருக்கின்றன. தைத்திரிய பிரமாணத்தில் பஞ்சாசரதிய-சேவா (Panchasaradiya-seva) எனும் பலியிடும் முறை உள்ளது. அதில் ஐந்துவயதான முதுகில் மேடு இல்லாத குள்ளமான பதினேழு காளைகளும் மூன்று வயதுக்கும் குறைவான பல கன்றுகளும் எரித்துப் பலியிடப்படுவது பற்றிக் குறிப்பிடப்பட்டிருப்பது முக்கியமானதாகும்.

அபஸ்தம்பா தர்ம சூத்திரத்தின் (Apastamba Dharma Sutra) பிரகடனத்துக்கு எதிராக, பின்வரும் புள்ளிகள் கவனத்தில் கொள்ளப்படலாம். முதலாவது அம்சமாக, முன்னைய சூத்திரத்திலுள்ள பசுவின் இறைச்சியை உண்ணும் தடைசெய்யும் பிரகடனத்துக்கு முரணான கூற்று அதே சூத்திரத்தின் 15, 14, 29 ஆகிய பகுதிகளில் கூறப்படுகிறது: “பசுவும் காளையும் புனிதமானவை எனவே அவற்றினை  உண்ண வேண்டும்”. அடுத்ததாக, க்ருஹ்ய சூத்திரத்திலுள்ள (Grihya Sutras) மதுபார்க்கத்துக்கான (Madhuparka- ஒரு வகையான பானம்)  பரிந்துரையாகும்.

ஆரியர்கள் மத்தியில், முக்கிய விருந்தாளிகளை வரவேற்பதற்கு ஒரு தனிப்பட்ட பண்பாடு உருவானதுடன் அது ஒரு விழாவாகவே ஆகியிருக்கிறது. அங்கு முக்கியமாக வழங்கப்படும் பானம் மதுபார்க்கம் (Madhuparka) ஆகும். மதுபார்க்கம் (Madhuparka) தொடர்பான விரிவான விளக்கங்களை க்ருஹ்ய சூத்திரங்கள் பலவற்றில் (Grihya Sutras) காணலாம். பல்வேறுபட்ட க்ருஹ்ய சூத்திரங்களில் (Grihya Sutras) அடிப்படையில், கீழ்வரும் ஆறு வகையானர்களுக்கே மதுபார்க்கத்தினை பரிமாறுவதற்கான உரிமை வழங்கப்பட்டிருந்தது. (1) ரித்விஜா (Ritwija) அல்லது மிருகபலியினை செய்கின்ற பிராமணர், (2) ஆச்சாரியர்கள் அல்லது ஆசிரியர்கள், (3) மணவாளன், (4) மன்னர், (5) குருகுல கற்கையை நிறைவேற்றிய மாணவன் (Snatak) மற்றும் (6) விருந்தளிப்பவருக்கு நெருக்கமான நபர். சிலர் அதிதியையும் இந்தப் பட்டியலில் உள்ளடக்குவர். ரித்விஜா (Ritvija), மன்னர், ஆச்சாரியார் என்ற வகையில் உள்ளடங்காதவர்களுக்கு வருடத்தில் ஒரு தடைவை மதுபார்க்கம் பரிமாறப்படும். ரித்விஜா (Ritvija), மன்னர், ஆச்சாரியார் ஆகியோர் சமூகமளிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு மதுபார்க்கம் பரிமாறப்படும்.

மதுபார்க்கம் எவற்றினால் செய்யப்பட்டது? பரிமாறப்படும் மதுபார்க்கத்தில் கலக்கப்படும் பதார்த்தங்களில் வேறுபாடு இருக்கிறது. பிராமண வைதீக ஆகமங்கள் குறிப்பிட்டபடி,  Asv.gr and Ap.gr. (13.10) பரிந்துரைப்பதன் படி, இது தேன் மற்றும் தயிர் அல்லது வெண்ணெய் மற்றும் தயிர் சேர்ந்த ஒரு கலவை. ஏனையவற்றில்,  Par.gr.l3 இன் படி, இப்பானமானது தயிர், தேன் மற்றும் வெண்ணெய் சேர்ந்த கலவையாகும். இம்மூன்றும் அல்லது இம்மூன்றுடன் பொரித்த அரிசி மற்றும்  பார்லி என்பனவும் கலக்கப்பட்டு ஐந்து பொருள்கள் கொண்ட பானமாக இருப்பதாக Ap.gr. (13.11-12)  இல் குறிப்பிடப்பட்டுள்ளது. தயிர், தேன், நெய், தண்ணீர் மற்றும் தானியம் என்பவற்றில் ஏதாவது மூன்றினைக் கலந்து தயாரிக்கலாம் என ஒரு தெரிவை  Hir.gr.L, 12, 10-12  வழங்குகிறது. கௌசிக சூத்திரம் (Kausika Sutra) (92) ஒன்பது பொருள்களின் கலவை  என்கிறது. அதாவது, பிரம்மா (Brahma) தேன் மற்றும் தயிர், ஐந்திரா (Aindra – ஒரு வகை பாயசம் (Payasa), சௌர்ன்யா (தயிர் மற்றும் நெய்), பௌஸ்னா (Pausna – நெய் மற்றும் மந்தாரை Mantha), சரஸ்வதா  (Sarasvata – பால் மற்றும் நெய்), மௌசலா (Mausala – திராட்சை ரசம் (wine) மற்றும் நெய்  இவை சௌத்திரமனை (Sautramanai) மற்றும் ராஜசுயா (Rajasuya) பலியின் போது மட்டுமே பயன்படுத்தப்படும்), பரிவ்ராஜகா (Parivrajaka – எள்ளு எண்ணெய் மற்றும் எண்ணெய் கேக்). மதுபார்க்கம் மாமிசம் இல்லாது வழங்கப்பட கூடாது என்று வேதம் கூறுவதுடன், பசுக்கள் அவிழ்த்து விடப்படும் பட்சத்தில் ஆட்டிறைச்சி அல்லது பாயசம் (பாலில் சமைக்கப்பட்ட சோறு) வழங்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என   gr.l.9.22  இல் மாதவன் (Madhava) கூறுகிறார். வேறு வகை இறைச்சி வழங்கப்பட வேண்டும் என  Hir.gr. 1.13, 14  கூறுகிறது. பசு இல்லாதவிடத்து, ஆட்டிறைச்சி அல்லது கிடாய் இறைச்சி அல்லது காட்டு மிருகங்களினது இறைச்சி (மான், மற்றும் பல) வழங்கப்படலாம், மதுபார்க்கம் இறைச்சி இல்லாதவிடத்து பரிமாறப்பட முடியாது அல்லது இறைச்சி இல்லாதவிடத்து நில தானியங்கள் சமைக்கப்பட வேண்டும் என Baud.gr. (1.2,51-54) கூறுகிறது.  இந்த விவரணங்களில் இருந்து மதுபார்க்கத்தின் முக்கிய அம்சம் இறைச்சியென்றும் அதிலும் குறிப்பாக பசு இறைச்சியென்றும் புரிந்துகொள்ளமுடிகின்றது.  விருந்தினர்களுக்காக பசுக்கள் பலியிடப்படுவது அதிகரித்து, ஒரு சமயத்தில் விருந்தினர்கள் பசுக்களை வதைப்பவர்கள் என்ற அர்த்தம் தரும்படி “கோகண (Go-ghna)” என்று குறிப்பிடப்படும் நிலை வரை சென்றது.  இவ்வாறு விருந்தினர்கள் வருகின்ற போது பசுக்கள் கொல்லப்படும் வழக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக விருந்தினர்கள் வரும்வேளை பசுக்களை அவிழ்த்து விடலாம் என்று அஷ்வதேயான க்ருஹ்ய சூத்திரம் (1.24.25) (Ashvateyana Grihya Sutra) கூறுகிறது. மூன்றாவது, அபஸ்தம்பா தர்ம சூத்திரத்தின் (Apastamba Dharma Sutra) சாட்சியத்துக்கு எதிராக இறந்த உடல்களை அடக்கம் செய்யும் சடங்குகளைச் சான்றாதாரமாகக் கருதலாம். சூத்திரம் (Kane’s vol. II, Part I, p. 545) கூறுவனவாவது:

 1.   அவர் பின்னர் கீழுள்ள பலியிடும் நடைமுறைகளை இறந்த உடல் மீது செய்யவேண்டும்.
 2.   குஹு (Guhu) எனும் கரண்டி வலது கையில் இடப்படும்
 3.   உபபிறித் (Upabhrit.)  எனப்படும்  மற்றைய கரண்டி இடது கையில் இடப்பட வேண்டும்.
 4.   அவரது வலதுபுறத்தில்  ஸ்ப்யா (Sphya) எனப்படும் பலிக்குப் பயன்படுத்தப்பட்ட மரவாளும் இடதுபுறத்தில்  பலியிடப்படும்போது அக்கினி கோத்திரத்துக்கு பயன்படுத்தப்படும் கரண்டியும் (Agnihotrahavani) இடப்படவேண்டும்.
 5.   அவரின் மார்பின்மேல் துருவன் எனப்படும் பலியிடப் பயன்பட்ட பெரியகரண்டியும், தலையில் உணவுகளும், பற்களில் இன்றியமையாது கற்களும் இடப்படவேண்டும்.
 6.   அவரின் மூக்கின் இருபுறங்களிலும் இரு சிறிய, பலியிடப்பயன்படும் கரண்டியும் (Sruvas) இடப்படவேண்டும்.
 7.   அல்லது, ஒரு கரண்டி (Sruva) மட்டுமே இருப்பின், அதனை இரு சிறியதுண்டுகளாக உடைக்கவேண்டும்.
 8.   அவரின் காதுகளில் பிரசித்திரகரனாக்கள் (Prasitraharanas) அதாவது பிராமணர்களுக்காக ஒதுக்கப்பட்ட பலியிடப்பட்ட உணவுள்ள பாத்திரம் வைக்கப்பட்டிருக்கும்.
 9.   அல்லது ஒரு பாத்திரம் மட்டுமே இருக்குமாயின், இருதுண்டுகளாக உடைக்கப்பட்டு அவ்வுணவு பிரிக்கப்படவேண்டும்.
 10.  அவரின் வயிற்றில் பத்ரி எனப்படும் பாத்திரம் இடப்படவேண்டும்.
 11.  ஒரு கோப்பையில் பலிக்காக வெட்டப்பட்ட உணவு இடப்படவேண்டும்.
 12.  ஊழியர்கள் என அழைக்கப்படும் “சமி” உடலின் அந்தரங்க பாகங்களில் இடப்பட வேண்டும்.
 13.  தொடைகளில் இரு எரியும் மரக்கட்டைகள் இடப்படவேண்டும்.
 14.  கால்களில் உரலும் உலக்கையும் இடப்படவேண்டும்.
 15.  பாதங்களில் இரு கூடைகள் இடப்படவேண்டும்.
 16.  அல்லது ஒரு கூடையே இருக்கும்பட்சத்தில், அக்கூடையானது இரண்டாக உடைக்கப்பட்டு வைக்கப்படவேண்டும்.
 17.  குழாய் வடிவிலுள்ள திரவங்கள் நிரப்பப்பட கூடிய கருவிகள் இருப்பின், அவை  வெண்ணெய் தூவி நிரப்பப்படும்.
 18.  இறந்தவருடைய மகன் கீழ் மற்றும் மேல் திரிகைக் கல்லினை எடுக்கவேண்டும்.
 19.  செப்பு, இரும்பு மற்றும் மண்ணினால் உருவான கருவிகளை இடவேண்டும்
 20.  பெண் விலங்கினது பெருன்சுற்று விரிப்பினை  இறந்தவரின் தலை மற்றும் வாயின் மேல் மூட வேண்டும். அக்கினிக்கு எதிரான கவசமாக இந்த  பசுவிலிருந்து பெறப்பட்ட விரிப்பு பயன்படும் (இருக்கு வேதம்  X. 16.7).
 21.  விலங்கினது சிறுநீரகங்களை வலது சிறுநீரகத்தினை வலது கையிலும் இடது சிறுநீரகத்தினை இடது கையிலும் ஆக இடவேண்டும்.  (இருக்கு வேதம் X 14.10).
 22.  விலங்கினது இதயமானது இறந்தவரது இதயத்தில் வைக்கப்படும்.
 23.  ஆசான்களினது அறிவுரைப்படி, இரண்டுபிடி மா மற்றும் அரிசி இடப்படவேண்டும்.
 24.  ஆசான்களின் கருத்துப்படி சிறுநீரகம் இல்லாதவிடத்து மாத்திரம்
 25.  இறந்தவரின் உடலை மறைத்து போர்வை போல் ஒரு முழு விலங்கினை அதன் மூட்டுகள் இறந்தவரின் மூட்டுகளுடன் பொருந்தும் வகையில் வைக்கவேண்டும்.  பண்நீரினை (Pranita water) வேதம் ஓதும்போது தெளிக்கவேண்டும். ஆனால் அக்கினி அணையாமல் இருக்கவேண்டும் (Rig Veda, X. 16.8)
 26.  அவரது இடது முழங்காலை மடக்குவதனூடாக அவர் யுக்யா (Yugya) எனும் படையலினை அக்கினி சுவாஹா (Agni Svaha), கம சுவாஹா (Kama Svaha), பூமி சுவாஹா (the world Svaha), அனுமதி சுவாஹா (Anumati Svaha) என குரு தட்சனையாக வழங்குவார்.
 27.  ஐந்தாவது படையல் மார்பின் மீது வைக்கப்பட்டு இந்த உடலிலிருந்து வேறொன்று பிறவாது சொர்க்கத்தினை அடைய வாழ்த்துவர்.

மேற்குறிப்பிட்ட அஷ்வதேயான க்ருஹ்ய சூத்திரத்தில் ( Ashvateyana Grihya Sutra) குறிப்பிடப்பட்டுள்ள பந்திகளின் பிரகாரம், முன்னைய இந்தோ- ஆரியர்களில்  (indo-Aryans) ஒருவர் இறக்கும் போது இன்னொரு விலங்கும் பலியாக்கப்படுவது தெளிவாகிறது. மேலும், இறந்த உடல் எரிக்கப்படும் முன்னர், குறிப்பிட்ட விலங்கின் பாகங்கள் இறந்தவரின்  பொருத்தமான பகுதிகளில் இடப்பட்டிருக்கின்றன.

இவையே,  பசுவதை மற்றும் மாட்டிறைச்சி உண்ணுதல் என்பவற்றுக்கான ஆதாரமாக அமைகின்றன. இவற்றில் எந்தப்பகுதி உண்மையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது? சரியான பார்வை என்னவெனில், சதபத பிராமணம் (Satapatha Brahmana) மற்றும் அபஸ்தம்பா தர்மசூத்திரம்  (Apastamba Dharma Sutra) என்பவற்றின் சாட்சியங்களின் அடிப்படையில் நோக்கும்போது இந்துக்கள் பசுவதை மற்றும் மாட்டிறைச்சி உண்ணுதல் என்பவற்றுக்கு எதிரானவர்கள் எனக் கூறப்பட்டிருந்தாலும், இவ்வறிவுறுத்தல்கள் அளவுக்கதிகமான பசுவதைக்கு எதிரானதாக மேற்கொள்ளப்பட்டதேயன்றி முற்றுமுழுதாகப் பசுவதையைத் தடைசெய்வன அல்ல என்பதே இவற்றிலிருந்து தெளிவாகின்றது.  உண்மையில், பசுவதை மற்றும் மாட்டிறைச்சி உண்ணுதல் என்பன சாதாரணமான வழக்கமாக இருந்துள்ளதையே இவ்வறிவுறுத்தல் நிரூபிக்கிறது. அதிகளவு பசுவதைக்கு எதிராக இவ்விதம் அறிவுறுத்தப்பட்டிருந்தபோதும் பசுவதை மற்றும் மாட்டிறைச்சி உண்ணுதல் என்பன தொடர்ந்துகொண்டுதான் இருந்தன.  பெரும்பாலும் அவர்கள் செவிடர்கள் காதில் விழுவதாக ஆரியர்களில் சிறந்த முனிவர்களின் ஒருவரான யாஜ்னாவாக்யாவின் (Yajnavalkya)  நடத்தையால் நிரூபிக்கப்பட்டது. சதபத பிரமாணத்திலிருந்து (Satapatha Brahmana) எடுக்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட முதலாவது பந்தியானது யாஜ்னாவாக்யாவிற்கு (Yajnavalkya) ஒரு அறிவுறுத்தலாக விடப்பட்டிருந்திருக்கிறது.  யாஜ்னாவாக்யா எவ்வாறு பதிலளித்தார்? அவர்களது அறிவுறுத்தலினைக் கேட்டபின்னர் யாஜ்னாவாக்யா கூறினார்,  “நான், எனக்காக வழங்கப்படும் இது மென்மையானதாக இருக்கின்றபோது அதனை உண்பேன்”

இந்துக்கள் ஒரு காலத்தில் பெருமளவு பசுக்களைக் கொன்று உண்டிருக்கிறார்கள் என  வேதம் மற்றும் பிரமாணங்களுக்குப் பல காலப்பகுதிகளுக்குப் பின்னர் பௌத்த சூத்திரத்திலுள்ள யஜ்னாக்களின் விளக்கங்களிலும் (Yajnas) குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வளவு பசுக்கள்  மற்றும் விலங்குகள் படுகொலை செய்யப்படுகின்றனவோ அது பெருமைக்குரியதாக இருந்தது.  இவ்வாறாக மதத்தின் பெயரால் பார்ப்பனர்களால் நடத்தப்பட்ட பசுவதைகளுக்கு முழுமையான ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை.  இந்தச் சூத்திரங்களுக்கான தரவுகள் பௌத்த இலக்கியங்களில் இப்பசுவதைகள் எவ்வளவு தூரம் நடைபெற்றன என்பது பற்றி இருக்கின்ற தரவுகளில் இருந்து பெறப்பட்டிருக்கலாம்.  உதாரணமாகக் குத்தாடந்தா சுட்டா (Kutadanta Sutta) எனப்படும் பௌத்த சூத்திரத்தில் குத்தாடந்தா பார்ப்பனர்களால் (Brahmin Kutadanta) மேற்கொள்ளப்பட்ட மிருகபலிகளிற்கு எதிராக போதனைகளிலிருந்து தரவுகள் பெறப்பட்டிருக்கலாம்.  புத்தர் கேலியான பரிகாசமான முறையில் கூறி இருந்தாலும், அவர் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள மிருகபலிகள் தொடர்பான நடைமுறைகள் மற்றும் சடங்குகள் பற்றிய நல்லதோர் அவதானத்தைக் கூறுகின்றார்.  அவர் கூறும் போது:

“மேலும் சொல்வதானால், பிராமணர்களே நீங்கள் இறந்த உடல்களை அடக்கம் செய்யும்போது காளைகளையோ, ஆடுகளையோ, கோழிகளையோ, கொழுத்த பன்றிகளையோ பலியிடவில்லை. எந்தவொரு மரங்களும் கம்பங்களாக பயன்படுத்தப்படுவதற்காக வெட்டப்படவில்லை, பலியிடப்படும் இடத்திலுள்ள  தருப்பைப்புற்கள் வெட்டப்பட்டிருக்கவில்லை.  வேலைக்கு அமர்த்தப்பட்ட அடிமைகள், தூதர்கள் மற்றும் வேலையாட்கள் பயந்தவர்களாகவோ வேலையின் போது கண்ணீர் விட்டு அழுபவர்களாகவோ இருக்கவில்லை”

குத்தாடந்தா (Kutadanta) மாறாக, புத்தரின் கலந்துரையாடல் எவ்வகையான பரிமாணத்தில் மிருகவதை நடைபெற்றிருக்கிறது என்ற கருத்தினையும் கூறுவதுடன் புத்தரின் கலந்துரையாடலுக்கு நன்றியும் கூறுகிறது. அவர் கூறும் போது:

“நான், பெருமதிப்புக்குரிய எனது வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வதுடன் அவரது கொள்கைகளையும் கட்டளைகளையும் ஏற்றுக்கொள்பவன் ஆவேன்.  இந்த நாளிலிருந்து இருக்கும் என் வாழ்வு தொடரும்வரை அவரைத் தனது வழிகாட்டியாக ஏற்ற ஒருவனைச் சகித்து மதிப்புக்குரியவர் கௌதமர் தன் சீடனாக ஏற்பாராக. மற்றும், நான், கௌதமர் அவர்களுக்காக எழுநூறு காளைகளையும் எழுநூறு காளைக்கன்றுகளையும், எழுநூறு பசுக்கன்றுகளையும் எழுநூறு ஆடுகளையும், எழுநூறு செம்மறியாடுகளையும் அவர்களது தமது வாழ்வினைத் திரும்பிப் பெறுவதற்காக சுதந்திரமாக விடுவிக்கிறேன். அவர்கள் புற்களை உண்ணட்டும், சுத்தமான நீரினை அருந்தட்டும், தென்றல் காற்று அவர்களின் மேற்பட்டு மிதக்கட்டும்.”
சம்யுத்த நிக்காய (Samyuta Nikaya) 111, 1-9 க்கு அமைய, கோசலை நாட்டின் மன்னரான பசேனடியினால் (Pasenadi) செய்யப்பட்ட வேள்வி அல்லது யாகம் பற்றிய இன்னொரு விவரணம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.  ஐநூறு காளைகளும், ஐநூறு காளைக்கன்றுகளும், பல பசுக்கன்றுகளும், ஆடுகளும் செம்மறியாடுகளும் இந்த யாகத்தில் பலியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆதாரங்களுடன், இந்துக்கள் அதாவது பார்ப்பனர்கள் மற்றும் பார்ப்பனரல்லாதவர்கள் யாவரும் ஒரு காலப்பகுதியில் மாமிசம் மட்டுமல்லாது மாட்டிறைச்சியினையும் உண்டுள்ளார்கள் என்பதில் ஐயமில்லை.

மேற்கோள்:

[B. R. Ambedkar, ‘Did the Hindus never eat beef?’ in The Untouchables: Who Were They and Why They Became Untouchables? in Dr. Babasaheb Ambedkar Writings and Speeches, vol. 7, (Government of Maharashtra, Bombay, 1990, first edition 1948) pp. 323-328.]

(ஷம்சுல் இஸ்லாம் என்பவரால் தொகுக்கப்பட்டது)

குறிப்பு:

 1.   கீழ்காணும் குறிப்பு இக்கட்டுரை முதன்முறை பதிவேற்றப்பட்ட “The Milli Gazette print” தளத்தில் கட்டுரை பற்றிய அறிமுகக் குறிப்பாக இடம்பெற்றது:

பசுக்கள் இந்து மதத்தில் புனிதமாகக் கருத்தப்படுவதால் அவற்றினை வதைப்பது கொடூரமான செயல் என்றும் அதனால் மாட்டிறைச்சி உண்ணுவைதை எதிர்க்கின்ற நிலைப்பாட்டை டாக்டர் அம்பேத்கர் எடுத்தார் என்றும் கூறி தமது இந்துத்துவ செயற்திட்டங்களை டாக்டர் அம்பேத்கரும் ஆதரித்தார் என்றும் RSS மற்றும் அதன் ஆதரவு நிலைப்பாடுடையவர்கள் கூறுவது மிகப்பெரிய புரட்டாகும்.  சிறந்த ஆராய்ச்சியாளரான டாக்டர் அம்பேத்கர் “இந்துக்கள் மாட்டிறைச்சி உண்பதில்லையா?” என்ற தலைப்புடைய ஒரு அற்புதமான கட்டுரையினை எழுதினார். இந்தியர்களின் கடந்த காலத்தினை அறிய முற்படுபவர்களும் சிறுபான்மையினத்தவரினை ஒழிக்கும் அல்லது ஒதுக்கும் மேலாதிக்கக் கட்டுக்கதைகளினை கேள்விக்குட்படுத்த விரும்புவர்களும் மேற்குறிப்பிட்ட அவரது படைப்பினை வாசிக்க வேண்டும்.

 1.   இந்த கட்டுரையானது   வைகாசி 31, 2010ல் வெளியான “The Milli Gazette print” இன் வெளியீடு 16ன் 9வது பக்கத்தில் வெளியாது.  பின்னர் Counter Currents இணையத்தளத்தில் மறுபிரசுரமாகப் பதிவேற்றப்பட்டது. (http://www.countercurrents.org/ambedkar050315.htm)
 2.   பலியிடலுக்கு எதிரான தடை, மற்றும் மாட்டுவண்டிச்சவாரிக்கு எதிரான தடை என்பவற்றுக்குப் பின்னணியில் இந்துத்துவ சக்திகளின் செல்வாக்கு ஈழத்திலும் அதிகரித்துவருகின்றதோ என்கிற அச்சத்தின் எதிர்வினையாக விழிப்புணர்வூட்டும் முகமாகவும், உரையாடல் ஒன்றை ஆரம்பிக்கும் நோக்குடனும் இந்தக் கட்டுரை இங்கே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றது.  இந்த மொழியாக்கம் கட்டுரையின் மூல நோக்கத்தினை இயன்றவரை கருத்தியல் ரீதியாக மொழிமாற்றம் செய்கின்ற நோக்குடனே செய்யப்பட்டது.  வரிக்குவரி என்கிற முறை பிரயோகிக்கப்படவில்லை.

நன்றி : ஆக்காட்டி -11 

நீள்கூந்தலும் நிலந்தேய ஆடைகளுமாய்…

             கலாசாரக் காவிகளாகப் பெண்கள் உடையலங்காரம், தலையலங்காரம், பாசாங்கான புறவடையாளங்கள், பண்பாடு என்ற பெயரில் பழமை பேணுதல் எனத் தங்கள் சமூகத்தின் பிரதிநிதிகளாகப் பெண்கள் தான் இருக்க வேண்டுமென்கிறார்கள்.

அவர்களே அவ்வடையாளங்களைச் சுமக்க வேண்டுமெனத் திரும்பத் திரும்ப ஆண்களும் ஆண்களின் மூளையால் சிந்திக்கும் பெண்களும் சொல்லியபடியே இருக்கிறார்கள். ஆண்கள் தம் தலைமுடிகளைக் குறைப்பதன் காரணம் போலவே பெண்களுக்கான தலையலங்காரத்திற்கான காரணமும். ஆண்கள் தம் ஆடைகளைத் தெரிவு செய்வதைப் போலவே பெண்கள் தங்கள் மனதிற்கும் வசதிக்காகவும் தெரிவு செய்வதுமாகும். போதாதென்று உண்பதும் அருந்துவதும் கூட இவையிவை இன்னின்னாருக்கானவை என வரையறுக்கப்பட்டுப் பேசுவது மடமைத்தனத்தின் உச்சம்.  இவை போன்ற மிக மிக எளிய நாளாந்தச் செயற்பாடுகள் கூட நம் சனங்கள் மத்தியில் பெண்கள் பற்றிப் பயத்தை ஏற்படுத்துகிறது.

பிரித்தானியக் கொலனியாக   படிப்பு, பதவி , நாகரிகம் என்பவற்றைக் காரணங்களாகக் கொண்டு உடைகள், தலையலங்காரம், காலணிகளை ஆண்கள் மாற்றிக் கொண்டதைப் போல பெண்கள் நவீனத்துவத்தைக் கடைப்பிடிக்க சமூகம் விடவில்லை. இன்று வரை தமது கலாசாரப் பண்பாட்டுப் பிரதிநிதிகளாகப் பெண்களை வைத்திருப்பது, ஆண்களுக்கும் , அதிகாரத்திற்கும் வசதியாகவேயுள்ளது. நீள்கூந்தலும் நிலந்தேய உடைகளுமாக நடமாட நம் போலித்தனமான சுற்றம் வெருட்டுகின்றது.

கால மாற்றத்திற்கும் காலநிலைகளுக்கும் மாறிக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயங்கள் கூட புலம் பெயர்ந்து மற்றைய சமூகத்தினருடன் கலந்து வாழும் போதும், தாய்நாட்டில் வாழும் போதும் ஏற்பட்டாலும் கடவுளை மறுக்க நடுங்கும் மிரட்சி போலாகி பழகி விட்டது.
இனம், சாதி, மதம், பண்பாடு கலாசாரமென்று போலி மனிதர்களாய் இக்கலாசாரக் காவலர்கள். உண்மையாகவே மனமகிழ்வை அளிக்கும் செயல்களிலோ உடலைப் பேண உதவும் உடைகளிலோ ஈடுபாடு காட்டாமல் வெற்றுச் சம்பிரதாயங்கள் , சடங்குகள், பழக்கவழக்கங்களைக் காவிக் கொண்டு வந்து புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் நேரம், பணம்,சக்தி என்பவற்றை விரயஞ் செய்கின்றனர். சாதி,மதம், தமிழ்க் கலாசாரம்,பண்பாடு என வெறும் பேய்க்காட்டல்களை வைத்துக் காலந்தள்ளிக் கொண்டிருப்பது பற்றிச் சற்றும் வெட்கப் படுவதில்லை.
இவர்கள் தான் பெண்களுக்கான ஒழுக்க மதிப்பீடுகளைப் பிதற்றும் பிற்போக்காளர்கள். பொதுவெளியில் பேசவும் செயற்படவும் புறப்படும் பெண்களையிட்டு இவர்கள் அச்சங்கொள்வதும் அதீதக் கற்பனைகளைச் செய்து இன்பங்காண்பதுமாக இருக்கிறார்கள். இங்கு நல்லியல்புகளைச் சுவீகரிக்க, மனித மாண்புகளைப் பேணச் சற்றும் முனைவதில்லை. பெண்களை முடக்குவதையிட்டுச் சிறிதும் சிந்திக்கத் தயாராயில்லாதவர்கள். இவர்கள் இன ஒடுக்குமுறை பற்றி முழங்குகிறார்கள்.தம்மைச் சார்ந்த சக பெண்ணை மதிக்காமல் என்ன விடுதலையை எங்கு பெற முடியும்?

தர்மினி

அடுத்தடுத்துப் படித்த இரண்டு புத்தகங்கள்

40 இளைஞர்கள் பயிற்சிக்காக இந்தியா செல்வதற்கு என படகேறி வந்து கரையிலிறங்கி விடுகின்றனர். ஆனால் யார் பொறுப்பெடுப்பது? எங்கே முகாமிருக்கிறது எனத்தெரியாமல் ஒரு மணித்தியாலமாக இராமேஸ்வரத் தெருக்களில் ஊர்வலமாகத் திரிந்தோம் என்பதாக எல்லாளன் எழுதியிருப்பவை எல்லா இயக்கங்களும் நாட்டுக்காக என இப்படித்தான் புறப்பட்டன. அவர்களுக்கு நம்பிக்கையீனங்களும் உயிரச்சங்களும் தங்கள் சொந்த இயக்கங்களிலும் அதே நேரம் அவர்களை விடப் பலமான ஏனைய இயக்கங்களாலும் ஏற்பட்டன.
இயக்கத்தின் உள்ளே நடைபெறும் நடவடிக்கைகள் அவர்களை விரக்தியடையச் செய்தன. இதையெல்லாம் தாண்டியே பேரினவாதத்திற்கு எதிராகப் போராட வேண்டியிருந்தது. தம்மவரைக் கொன்றனர். அடுத்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களை ஆளுக்காள் வேவு பார்ப்பதும் கொல்வதும் என நாட்டுக்காக என வீட்டை /படிப்பை/ வேலைகளை விட்டு ஓடிப்போனவர்கள் ஆயுதங்களை மட்டுமே நம்பிய போராட்டமாக மட்டுமே அது தேங்கி அழிந்தது. ரெலோ இயக்கத்தில் சேர்ந்து எந்தப் பதவியோ அதிகாரமோ அற்ற மிகச் சாதாரண இயக்க உறுப்பினராக இருந்த எல்லாளன் அன்றைய மனநிலையிலிருந்து உறவுகளுக்கு எழுதும் கடிதம் போன்ற எளிமையான வரிகளுடனும் பூச்சுகளற்றும் ‘ஒரு தமிழீழப் போராளியின் நினைவுக் குறிப்புகள்’ என்ற சுயஅனுபவங்களடங்கிய புத்தகம் இது.
அக்காலத்தில், புலிகள் அமைப்பிலிருந்து தப்பி வந்தவர்களுக்கு ரெலோவில் இருந்து பிரிந்த இவர்கள் பாதுகாப்புக் கொடுத்தனர். ரெலோவிலிருந்து பிரிந்த பெண்கள் புலிகளுடன் இணைந்ததுமாக சம்பவங்களைத் தன் குறுகிய கால இயக்க வாழ்வின் அனுபவங்களில் பதிவு செய்ததும் வரலாற்றைப் புரட்டுபவர்கள் அறிய வேண்டியவை. 1982 ல் எங்கள் கிராமத்திற்கான பங்குத்தந்தையாக இருந்தவர் ஃபாதர் சின்னராசா. அதன் பின்னர் போராட்டதில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு உதவிய குற்றச்சாட்டில் கைதாகிச் சிறையிலிருந்த அவரும் சிறையுடைப்பில் தப்பித்து விடுகிறார். தமிழ் நாட்டிலிருந்த போது ரெலோவிலிருந்து விலகி வழி தெரியாது நின்ற 5 பெண்களை பொறுப்பெடுத்து படிக்க உதவுகிறார். ஆனால் அதிலே 3 பெண்கள் தாம் புலிகளோடு சேர்ந்து போராடப் போகின்றோம் என இணைந்து விடுகின்றனர். அதே போல நிர்மலாவும் அவர்கள் மீதான அக்கறையோடு அவர்களோடு பேசவேண்டும் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்எனக் கேட்பதைக் குறிப்பிட்டுள்ளார். ரெலோவிலிருந்து விலகி இணைந்தவர்கள் தான் புலிகளின் முதலாவது பெண்படையினர் அவர்களில் சோதியா மற்றும் சிலர் அடங்குவர் என எழுதியிருக்கிறார். அதே போல ரெலோவில் இருந்த சந்திரன் தான் ராஜீவ் கொலை தொடர்பான சிவராசன் என்பவை போன்ற தகவல்களை இதிலே குறிப்பிட்டுள்ளார் எல்லாளன்.
ஈழப்போராட்டத்திற்குப் பயிற்சிகளை வழங்குவது, கண்டும் காணாமல் விடுவது, கண்காணிப்பது, இயக்கங்களிடையில் பிரச்சனைகளைத் துாண்டிவிடுவது என இந்தியப் புலனாய்வுத்துறை என்னென்ன தந்திரங்களை தகிடுதத்தங்களைச் செய்தது என்பவற்றின் சிறு சிறு தகவல்களை ஆங்காங்கே வழங்கியிருக்கிறார். அதே நேரம் பொதுமக்கள் மத்தியில் போராளிகள் பற்றிய பார்வை மதிப்புடனும் அனுதாபத்துடனுமே இருந்திருக்கிறது. கியூ பிராஞ் தம் அதிகாரங்களைப் பயன்படுத்தி கல்விகற்க இடங்களைப் பெற்றுக்கொடுத்ததும் உண்டு. ரேஷன்கடை, மருத்துவமனைகளில் தங்களுக்கு முன்னுரிமையும் சலுகைகளும் அப்போது இருந்தன எனக் குறிப்பிடுபவர் இதெல்லாம் ராஜீவ் கொலையோடு மாறிவிட்டது என்கிறார்.
ஆனால், சில சம்பவங்கள் நடந்த காலத்தை நினைவிருத்திச் சரியாகக் குறிப்பிடாததும் சிலரது பெயர்களை மறந்துவிட்டதாக எழுதியிருப்பதும் ஓரளவு அதிருப்தியைத் தருகிறது. இப்படியான சிறு சிறு வரலாற்று தரவுகளை தான் கண்ணால் கண்டவற்றை இப்போதாவது எழுதிவிடவேண்டும் என நினைத்ததை பாராட்ட வேண்டும்.
                 சாவிற்குப் பின்பு தான், றொமிலா ஜெயன் என்ற பெயரில் என்னோடு பேஸ்புக்கில் நட்பாயிருந்தவர் தான் தமிழினி என்ற விடயமே எனக்குத் தெரிந்தது. அவருடைய சாவிற்குப் பிறகு நினைத்துப் பார்த்தேன். அவருடன் உரையாடலெதுவும் செய்திருக்கவில்லை. சில பதிவுகளுக்கு லைக் செய்திருந்தேன். அவர் புற்றுநோய் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்திருந்ததும் ஞாபகமுண்டு.
மாற்றுக்கருத்தாளர்கள், துரோகிகள், அரசாங்கத்தின் ஒத்தோடிகள் எனப் புலிகளை விமர்சித்தவர்களைத் துாற்றியவர்கள் இப்புத்தகத்தைப் படித்து உள்ளிருந்து இயங்கிய தமிழினி முன் வைக்கும் விமர்சனங்களை முன்முடிவுகள் இல்லாமல் சீர்துாக்கிப்பார்த்து சிந்திக்க முடிந்தால் நன்றே.
                தமிழினி , இயக்கம் … இயக்கம்… என பல இடங்களில் தான் வெளியே இருந்த ஒருவரைப்போல எழுதியிருப்பது கட்டளைகளுக்குக் கேள்வி கேட்காமல் கீழ்ப்படிபவர்களாக அங்கு போராளிகள் இருந்ததைக் காட்டுகிறது. ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ புத்தகத்தில் புதிதாக அறிந்த ஒரு விசயம் மாத்தையாவையும் அவரைச் சேர்ந்தவர்களையும் இருத்தி வைத்து ஏனைய முக்கிய உறுப்பினர்களை அழைத்துக்குற்றம் பற்றி ஒப்புக்கொள்ளச் செய்தது. அச்செய்கை ஏனைய தளபதிகளுக்கான பயமுறுத்தலுமாக இருந்திருக்க வேண்டும். அதிகாரத்தின் உச்சியிலிருந்த தலைமையைத் தாண்டி எதுவும் பேசவோ செய்யவோ முடியாத நிலையில் தன் போன்ற பொறுப்பாளர்களே அமைதியாகவும் கண்ணீர் விட்டு அழவும் முடிந்தது என ஆங்காங்கே எழுதியிருப்பதை இயக்கத்திற்குள் நடப்பவற்றை ஓரளவாவது அறிந்தவர்கள் நம்புவார்கள்.
2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுகளை அண்மித்த போது அந்தப்பக்கம் நின்ற இராணுவத்தினரிடம் போய்ச் சேருவதைத்தவிர மக்களுக்கு வேறு வழியில்லை. அப்போது இயக்க உறுப்பினர்களும் என்னென்ன மனநிலைகளோடு தத்தளித்தனர் என்பவையெல்லாம் இந்த நுாலைப் படித்த போது இன்னுமின்னும் நம்மைக் கலங்கச் செய்பவையாகவே உள்ளன. படிப்படியான வளர்ச்சியில் ஆயுதங்களை இயக்குவதற்கான ஆட்கள் தான் தேவைப்பட்டேதேயொழிய , மக்களுக்கான போராட்டமாக அது மக்கள் மயப்படவில்லை. அது மறுவளமாய் திரும்பிச் சனங்களையே அழித்தது என்ற உண்மையைப் பதிவு செய்த தமிழினி வாழ்ந்திருக்கவேண்டும்.
இயக்கங்களிற்கு வீறுடனோ வற்புறுத்தப்பட்டோ சந்தர்ப்பத்தாலோ போனவர்கள் ஒவ்வொருவருக்கும் எழுத ஒரு சரித்திரம் உண்டு. அதெல்லாம் பார்க்கிறவர்களுக்கு துரோகத்தின் சரிதமாகவும் யுத்தத்தின் தோல்வியாகவும் தப்பிப்பதற்கான தந்திரமாகவும் அவரவர் வசதிப்படி தெரியும். ஆயினும், நம்மை மறு மதிப்பீடு செய்யவும் விமர்சனங்களிலிருந்து கற்றுக் கொள்வதற்குமான ஆவணங்களான இவை போன்றவை நிச்சயமாக உதவும்.

துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான்!

தர்மினி
selvam book
       ‘எழுதித் தீராப்பக்கங்கள்’ தொகுப்பில் ஒவ்வொரு அனுபவக் கட்டுரையையும் அகதிகளின் உணர்வுகளாகச் செல்வம் அருளானந்தம் எழுதியிருக்கிறார். அவரது பார்வையும் சிந்தனையும் அவற்றிலே நகைச்சுவையைக் காண்பதுமாகத் துயரங்களை எழுதியவற்றைப் பாராட்டும் அதே நேரம், ஒவ்வொரு கட்டுரையின் தலையங்கமும் அதனோடு இணைந்த ஓவியங்களும் அவற்றை மலினப்படுத்தி விடுகின்றன என்பது இத்தொகுப்பின் பலவீனமாய் எனக்குத் தெரிகிறது. சட்டென்று எனக்கு ஞாபகம் வந்தது தமிழ்வாணன் காலத் தலைப்புகள் போலயிருக்கே என்பது தான். தலைப்புகள் ஓவியங்கள் கவர்ச்சியாக வாசகரை வாசிக்கத் தூண்டுவதற்கானவையாக இருக்கவேண்டுமென வைத்தாரா செல்வம் தெரியவில்லை.
ஆனால், உள்ளே விடயங்கள் காத்திரமானவை. பாலியற்தொழிலாளர்களை நோக்கும் விதம், பயணத்தில் தற்செயலாகச் சந்தித்த அம்மா இறந்ததைச் சொல்லியழவும் ஆளில்லாத இளைஞனை ஆறுதற் படுத்துவது, இருக்க இடமில்லாத யாரென்று அறியாத ஒரு பெண்ணுக்கு எல்லோருமாக இடம் ஒதுக்குவது, மொழியறிவற்றவர்களாக உலைவது, சாப்பாட்டு நேரத்தில் அறைக்கு நண்பர்கள் வர வர உணவு போதாத நிலையிலும் உபசரிக்கச் சமையலில் திடீர்மாற்றங்களை செய்வது, ஏனைய நாட்டு அகதிகளையும் மரியாதையோடு நினைப்பது எனக் கட்டுரைகளின் உள்ளடக்கங்கள் ஒவ்வொன்றும் மானுடநேயமும் அகதிகளின் அந்தரிப்புமாக வாசிப்புச் சுவையோடு எழுதப்பட்டிருக்கிறது.
எண்பதுகளில்-தொண்ணுாறுகளில் அகதிகளாக வந்திறங்கியவர்கள் வதிவிட உரிமை, சொந்த வீடு, வேலை வாய்ப்புகள், ஓய்வூதியம், பிரஜாவுரிமை எனக்காலூன்றி விட்டவர்கள் வருடாவருடம் விடுமுறைக்குப் பயணங்களை மேற்கொண்டால், அது பொதுவில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த எல்லோருடைய நிலையுமென ஊரிலுள்ளவர்கள் அனேகர் நினைத்து விடுகின்றனர். ஆனால் இப்போதும் எழுதித் தீராப்பக்கங்களில் எழுதப்பட்டதைப் போல் அறைகளில் அடைந்து வேலையும் அகதிஅந்தஸ்துக்கான அலைச்சலுமாக வாழ்பவர்கள் தொடர்ந்து இருந்து கொண்டு தானிருக்கிறார்கள். தற்போது சிலருக்கு உறவுகள் , நண்பர்கள் என ஓரளவு ஆறுதலுண்டு. அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்படாமல் அதற்கான வழக்குகளோடு இருக்கும் இளைஞர்கள் பலருள்ளனர்.
இங்குள்ள ஏராளம் பலசரக்குக் கடைகளில் மற்றும் உணவகங்களில் பதிவு செய்யப்படாமல் கறுப்பில் சம்பளம் வாங்குபவர்களது துயரம் தீர்ந்தபாடில்லை. தொழிலாளருக்கான சட்டப்படியான சலுகைகள் ஏதுமற்று நாள் முழுதும் வேலை. குறைந்த சம்பளம் என முன்னொரு காலம் அகதிகளாக வந்து முதலாளிகளான தமிழ் முதலாளிகளே இந்த இளைஞர்களை வதைத்துக் கொண்டிருக்கின்றனர். அதே நேரம் சட்டத்தரணிகளுக்காகவும் ஆவணங்களின் மொழிபெயர்ப்புகளுக்காகவும் செலவளிக்க வேண்டியவற்றுக்கும் மிச்சம் பிடித்து நாட்டிலுள்ள உறவுகளுக்கும் உதவிடவேண்டியவர்களாக இருக்கிறார்கள்.
ஆகவே, இது பழைய கதைகளடங்கிய தொகுப்பென யாரும் நினைக்கக்கூடாது. எழுதப்பட்டுள்ள சம்பவங்கள் போல இன்னுமின்னும் புதிய புதிய பிரச்சனைகளும் அவலங்களும் தொடர்ந்தபடியே உள்ளன. இங்கு அதை அனுபவிப்பவர்களால் எழுதிவிட முடியாதளவு மன நெருக்குவாரம் இருக்கிறது. துன்பங்களைச் சொல்வதும் எழுதுவதும் அனுபவிப்பதைப் போலவே துயரமானது தான். இயலுமானவர்கள் இந்தப் புத்தகத்தை ‘வெளிநாட்டில சொகுசாக வாழுறார்கள்’ எனச் சொல்பவர்களுக்கு ஒரு பிரதி அனுப்பலாம்.

அம்ருதா கவிதைகள் 5

amrutha
-தர்மினி-
பேரிரைச்சல்…
அலைகளை என்ன செய்யலாம்?
கரையில் நின்றபடி பார்க்கிறேன்.
தோணியொன்றும் காணவில்லை.
கடல் நடுவில்
குதித்து விழுகிறது ஒரு மீன்
2.
வார்த்தைகளில் சொல்ல முடியாததை
எழுதச்செய்கின்றன
விம்மும் உதடுகள்.
முளாசி எரிகின்றது
தோல்.
நெற்றிக்கும்
பாதங்களுக்குமிடையில்
காகங்களின்  நிழல்கள் விளையாடுகின்றன.
அங்கிருந்து நீளும்
உங்கள் விரல்களில்
நதி பெருகுகின்றது.
அத்தொடுகையைப் பற்ற முடியாத தழல்கள்
உயிர் தீரும்வரை
நடனமாடிக் களிக்கின்றன.
3.
நான்
கதையொன்று சொல்ல ஆரம்பித்தால்
தொடங்குகிறது

உங்கள் இரவு.

நான்
கனவொன்றை நெய்யத் தொடங்க
முடிகிறது

உங்கள் இரவு.

விடிந்த பின்
நிர்வாணங்களைப் போர்த்திவிட்டு
நடக்கிறது

நாள்.

இருளும் ஒளியுமாக
நேரமும்
கிழக்கும் மேற்குமாக
துாரமும்
சந்திக்கும் நாளொன்றில்
இரவு தீராது.
4.
அய்யோ!
இவ்வரிகள் அழிபட்டே போகின்றன.
இவ்வளவு நாட்களாக
எவ்வளவு அருமையான வாக்கியங்களை எழுதினோம்.
கனவுகளை நடித்துப் பார்த்தோம்.
விதவிதமாக புதுப்புதுப் பெயர்களை எழுதிப் பார்த்தோம்.
செதுக்கிய பள்ளங்களிலிருந்து தேன் வடிகிறது.
காற்று உலர்த்திய வார்த்தைகள்
பறந்து செல்கின்றன.
அறைக்குள் இருக்கும் தனிமையோ…
பேசிக் கொண்டிருக்காத போதும்
நினைத்துக் கொண்டிருக்கிறது.
5.
கருப்பாடை தேய நடந்து போகிறது இவ்வுரு
வளர்ந்தபடி
வார்த்தைகளைச் சிதறியபடி
அது
வருவதை நின்று திரும்பிப்பார்த்தால்
என்னுள் ஒளிந்து
மறுபடி பின்னால்….
நிறுத்த முடியாத கதைகளைச் சொன்னபடி
வளர்ந்தபடி
நடை நடந்து பின் வருகிறது
இன்னொரு உரு.
நன்றி : அம்ருதா (யூன் 2016)

ஊரார் வரைந்த ஓவியம்

12968143_10207397115504021_7217224055954118226_o
‘கலகத்தை முதலில் தன் குடும்பத்திலிருந்தும் தன் உறவு முறைகளிடமிருந்தும் சொந்தச் சாதிக்குள்ளிருந்தும் தான் தொடங்கவேண்டும்.எனக்கு அப்படித்தான் தொடக்கம்…’ என எழுதும் துரை. குணா நேற்று அதிகாலை காரணமெதுவும் சொல்லாமல் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். ‘ஊரார் வரைந்த ஓவியம்’ என்ற நூலை வெளியிட்டதனால் தன் சொந்த ஊருக்குள்ளேயே விலக்கப்பட்டுத் துரத்தப்பட்டதை அதனால் அவரும் அவரது குடும்பத்தினரும் படும் துயரையும் எதிர்கொள்ளும் வழக்குகள் தடைகளைத் தொடர்ச்சியாகத் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டு வருவதை காண்கிறோம். கடந்த ஏப்ரல் 5ம் திகதி புதுக்கோட்டை சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நிர்வாக நடுவர் நீதிமன்றத்தினால் அவர் எழுதுவதன் பொருட்டான வரையறைகளை நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஆதிக்க சாதி ஒடுக்குமுறை பற்றிய அவரது கருத்துகளின் பொருட்டு குடும்பத்தோடு வருடக்கணக்காக வழக்குகளை எதிர்கொள்ளும் துரைகுணா தற்போது பொய்க்குற்றச்சாட்டின் காரணமாகவே கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தெரிவிக்கிறார்.
தொடர்ச்சியாகத் சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரளித்து வருபவர்.அரசியற் கருத்துகளை முன் வைப்பவர். ஒடுக்கப்படுபவர்களுக்கான அவரது செயற்பாடுகள் முடக்கப்படுவதற்கான வழிவகைகளை அதிகாரங்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றன. 36 பக்கங்களைக் கொண்ட ‘ஊரார் வரைந்த ஓவியம்’ ஒரு வாக்குமூலம் போன்ற குறுநாவல். சங்கரனின் மகன் அப்படி என்ன மிகப்பெரும் தவறை அந்த ஊரில் செய்துவிட்டான்?
நாளைக்கு கூடிப்பேசி தீர்ப்பை வழங்குவதாக ஆதிக்கசாதியினர் சொல்வதும் அதைத் தொடர்ந்து கட்சிக்காரனை அழைத்து வரவேண்டாம் இது ஊர்ப்பிரச்சனை நாங்களே பேசித்தீர்த்துக்கொள்ளுவோம் என்பதாக அவர்களைத் தொடர்ந்து தம் தீர்ப்பைக்கேட்கும் குடிகளாகவே வைத்திருக்க அந்தரப்படுவதுமாக ஒரு பக்கம் அடுத்த நாள் விசாரணை பற்றி சொல்லப்படுகிறது. கட்சியினர் இளைஞர்களை விழிப்படையச் செய்வதும் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகிறது. ‘ என்னைக்கி காட்டுவிடுதியான் இந்த ஊருக்குள்ளே இந்தக் கமிணாட்டிக்கட்சியை கொண்டு வந்தானோ அன்னையிலேர்ந்து இந்த ஊரு குட்டிச் சுவராப் போச்சி, பேண்டு சட்டையலப் பொட்டுக்கிட்டு போனு ஒயற காதுல மாட்டிக்கிட்டு இவனுக பண்ற அட்டகாசம் இருக்கே சே..சே…தாங்க முடியலே.நம்மக்கிட்டே காவைத்து கஞ்சிக்கி கம்முகட்டுல துணிய வைச்சிக்கிட்டு கால் கடுக்க நின்னப்பயலுவ இன்னைக்கி காரூலப் போனா எப்புர்றா ஊருல மழை பேயும்’ என்றும் ஆதிக்கசாதியினர் பேசுவதை துரைகுணா எழுதியது இற்றைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்னான கதையில் தான். இது எப்பவோ நடந்த பழைய கதையில்லை.
IMG_20160614_0001
இந்நாவலில் அதிகமும் ஆளுக்காள் உரையாடல்களைச் செய்வதைக் கொண்டு தான் கதை செல்கிறது.மனிதர்கள் தம் ஆற்றாமைகளை, பயத்தை, ஒடுக்குமுறைகளை அவர்களது கதைகளால் தம் மொழியில் வெளிப்படுத்துகின்றனர். மறுபுறமாக, அடுத்த நாள் என்ன நடக்கப் போகிறது?அப்படி என்ன தவறைச் சங்கரன் மகன் செய்து விட்டான்? இவர்கள் கூடிக்கூடிப் பேசுமளவு என்ன தான் அவன் செய்த பிழை? என்ற கேள்வி படிப்பதற்கு உந்துதலை ஏற்படுத்துவதோடு அம்மனிதர்களின் வார்த்தைகள் அந்த ஊரைப்பற்றிய சித்திரத்தை நமக்குத் தந்தும் விடுகின்றன.
‘மதியம் நேரம் மடிந்து மாலை நேரம் வந்தது.அம்பலப்புளி மரத்தடியில்…சரம்மாறியான கேள்விகளுக்கு முன் சங்கரன் கொதிக்கிற எண்ணெயில தடுக்கி விழுந்த குழந்தை மாதிரி துடிதுடித்து மனம் அனத்தி நின்னான்? தான் பெற்றப் பிள்ளை செய்த பெரும் தவறை நினைத்து’
‘எங்கே வந்து முடிய வேண்டியப் பெரச்சன? என் ஊட்டுல வந்து விடிஞ்சிருச்சி. நாளைக்கி என்ன நடக்கப் போகுதோ?என்று கிட்டிப்போட்டு உதைக்கென உதைத்துக் கொண்டு இருந்தது சங்கரன் மனசுல…’ என எழுதியதைப் படிக்கும் நமக்கும் அப்படியென்ன பாதகத்தை அந்தப் பிள்ளை செய்தான் என்ற பதைபதைப்பு ஏற்படுகிறது.
இந்நுாலின் மனிதர்கள் தங்களது இயலாத்தனங்களை காலாதிகாலமாக வழக்கமெனச் சொல்லப்பட்டுப் பழக்கமானவைகளைச் சுமந்து வாழும் நிலையின் பொருட்டு, குமுறிப் பேசுபவற்றை இயல்பான மொழியில், சிலேடைப்பேச்சுகளில் இயலாமைகளோடும் போராட்டங்களோடும் முன்வைப்பதாயிருக்கிறது.
தொடர்ந்து ஆற்றாமையோடு அதை வாசித்தபடி போனால் கதையின் முடிவில் தகப்பனும் தாயுமாக அவன் செய்த செயலையிட்டு அவனை ஊரை விட்டே தப்பிப்போகுமாறு பொதுகாப்பாய் அனுப்பிவிட்டு தாயும் தகப்பனும் நஞ்சருந்திச் சாகுமளவு ஆதிக்கசாதியினரின் ஒடுக்குதல்கள் இருப்பதும் பெரும் மன அவசத்தைத் தருகின்றது.
தாம்பாளத்தைத் தொட்டு திருநீறு பூசியதற்காகச் சங்கரனின் மகனைப் பூசாரி அடித்ததும் அதை விட தாம்பாளத்தை அவன் எப்படித் தொடலாம் என்ற பிரச்சனை ஊரையே கலவரப்படுத்தவதுமாக எழுதப்பட்ட கதையில் நடந்த மற்றுமொரு உரையாடல் துரைகுணாவையே ஊரைவிட்டு விலத்தி வெளியேற்றக் காரணமாகியதொன்றாய் அவரது குடும்பத்தவர்களும் பாதிக்கப்பட்டனர் என ஊரார் வரைந்த ஓவியம் தொடர்பாகப் படித்தவற்றிலிருந்து அறியமுடிகிறது.
இந்நுாலுக்காக 2015ம் ஆண்டுக்கான வளரும் படைப்பாளர் விருது தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கியதன் பொருட்டு துரை.குணா ’என்னை அடித்து ஊரை விட்டு ஒதுக்கி விரட்டியடித்த என் ஊர் மக்களுக்கே, இவ்விருதைச் சமர்ப்பிக்கின்றேன்’ என்றவாறாக எழுதிய வரிகள், அவர் தன் சனங்களிடமிருந்தும் புறக்கணிக்கப்பட்ட வலியை வேதனையைக்காட்டுகிறது.
இப்போது இரு நாட்களாகப் பொய்க்குற்றச்சாட்டில் புதுக்கோட்டைச்சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார் துரைகுணா. அதிகாரங் கொண்ட காவற்துறையினரின் நியாயம் சொல்ல முடியாத கைது துரை.குணாவுடைய எழுத்துகள் செயற்பாடுகளின் பொருட்டான அதிகாரவர்க்கத்தின் அநீதியும் மனிதவுரிமை மீறலுமாகும்.
 தர்மினி
ஊரார் வரைந்த ஓவியம்
கீழாண்ட வீடு வெளியீட்டகம்
விநியோக உரிமம் : கருப்புப் பிரதிகள் – தலித்முரசு
விலை ரூ.40

சாமத்தியச் சடங்கு என்ற பிற்போக்குத்தனமும் பெண் குழந்தைகள் மீதான அத்துமீறலே!

பனை/தென்னங் குருத்தோலைகள், மாவிலைகள், வாழைத்தண்டுகள் எனச் சூழலிலுள்ள மரங்களிலிருந்து பெற்றவற்றைக் கொண்டு கொண்டாட்டங்களுக்கு – சாவீடுகளுக்கு அலங்கரித்தல் என்பது வழமையானது. அதை நுணுக்கமாக விதவிதமான அலங்கரிப்புகளாக்குவதும் திறமை தான். ஆனால் இப்போது தேனி இணையத்தளத்தில் படித்த கட்டுரையொன்று ‘வித்தியாசங்கள் வரவேற்புக்குரியவை’ என்ற தலைப்போடும் ‘எளிமையும் அழகும் சிருஸ்டித்துவமும் மிகுந்த சாமத்தியச் சடங்கு’ என்ற உப தலைப்புமாக எழுதப்பட்டிருப்பதைப் படித்து மனம் சோர்ந்து போனேன்.
       பேராசிரியரொருவர், மட்டக்களப்பைச் சேர்ந்த விரிவுரையாளரொருவர் தன் மகளுக்குச் செய்த சாமத்தியச் சடங்கின் அழகையும் எளிமையையும் பெருமிதத்தோடு பாராட்டி எழுதியிருக்கிறார். <<நிறைந்த வாசிப்புத் திறனும், சிந்தனைத் திறனும்,யதார்த்தவாதியுமன இவர் தமது மகளின் சாமத்தியச் சடங்கினை வடிவமைத்த விதம் கண்ணையும் கருத்தையும் கவருவதாக அமைந்திருந்தது மரபைப் புதுமை செய்யும் சிருஸ்டித்துவம் அச்சடங்கில் அமைந்திருந்தது>> என்று எழுதியிருக்கிறார். எளிமையான இயற்கைப்பொருட்களால் அலங்காரம். பாரம்பரியச் சடங்குகளும் புதுமைகளுமாகச் சேர்ந்து புதுவிதமாகக் கொண்டாடப்பட்டது என ஒரு சிறுமி தன்னுடலில் இயற்கையாக அடையும் மாற்றங்களை முதல் மாதவிடாயை முன்னிட்டு எழுதப்பட்டுள்ளது.
      தங்கள் வீட்டில் ஒரு பெண் குழந்தையைக் கருத்தரிக்கக் கூடிய கர்ப்பப் பையைக் கொண்டவளாய் இருக்கிறாள் என்பதற்கான விளம்பரம் தான் சாமத்தியச் சடங்கு. சிறுமியை அலங்கரித்துப் பலர் முன்னிலையில் நிறுத்தி பழைய – புதிய எந்தச் சடங்கைச் செய்தாலும் அது அவளது முதல் மாதவிடாயின் பொருட்டான நிகழ்வே. அது இரண்டாவதோ அதன் பின் ஏறத்தாழ 400 தடவைகளாவது அவளது வாழ்நாளில் சந்திக்கப்போகும் வலியும் சோர்வும் கூடிய எல்லா நாட்களையும் போல எடுத்துக் கொள்ளப்படாமல் குடும்பமும் உறவுகளும் தங்களின் பெருமைகளையும் கொடுக்கல் வாங்கல்களையும் தீர்த்துக்கொள்ளப் பயன்படுத்தும் ஒரு சடங்காகி விட்டது.
             இன்னும் மாதவிடாய் பற்றியோ உடலில் ஏற்படும் இயற்கை மாற்றங்கள் பற்றியோ அச்சிறுமிக்குக் கற்பிப்பதோ அவளோடு அவை பற்றி உரையாடுவதோ கூட நடக்காது. அச்சிறுமிக்கும் தனக்கு ஏன் அக்கொண்டாட்டம் செய்யப்படுகின்றது என்ற புரிதலே இருப்பதில்லை. அது வழமை மற்றைய உறவுகள் அயலவர்கள் நட்புகள் அதைச் செய்தால் நாமும் செய்யலாம் எனும் பழகிப்போனதைச் செய்வோம் என்ற மனநிலை தான் அவர்களை இது பற்றி கேள்விகளைக் கேட்கவோ யோசிக்கவோ விடுவதில்லை.
               ஆனால், இயற்கைப்பொருட்களாலான அலங்காரத்தை முதன்மைப்படுத்தி ஒரு பேராசிரியர் சாமத்தியச் சடங்கை விதந்தோதுகிறார். அங்கு அச்சிறுமியின் தந்தையாகிய ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் சாமத்தியச் சடங்கு சம்பந்தமாக ஒரு புத்தகத்தை வெளியிட்டுமிருக்கிறார். அதுவொரு ‘அறிவூட்டும் விழாவாக அமைந்தது’ என எழுதியிருப்பதையும் படித்தபோது நமது ஆசிரியர்களும் பெரியோரும் நமக்கு எவ்விதமான சிந்தனைகளை வழங்குகிறார்கள் எனத் திகைப்பும் கோபமும் ஏற்படுகிறது.
             இயற்கைப் பொருட்களால் அலங்கார முறைகளும் புதுமையான சடங்குகளும் வித்தியாசமாயிருப்பதாய் பேராசிரியர் எழுதியிருப்பது பொருந்தவேயில்லை. காலகாலமாக மாவிலைகள், ஓலைகள், பாளைகளால் அலங்கரிப்பது வழமை தான். இங்கு கைவேலைப்பாடுகள் தான் புதுமையாம். சடங்குகள் என்றாலே பழமை தானே? பிறகு அதிலென்ன புதுமை? கட்டுரைத் தலைப்பில் இருப்பது போல் வித்தியாசங்கள் வரவேற்புக்குரியவை தான். ஆனால் சாமத்தியச் சடங்கில் அச்சடங்கு பற்றிய புத்தக வெளியீடு என்ற அந்த வித்தியாசம் நகைப்புக்குரியதாயிருக்கிறது. புத்தகத்தில் கட்டுரைகள் எழுதிப் புனருத்தாரணம் செய்கின்ற சாமத்தியச் சடங்கு என்ற பிற்போக்குத்தனமும் பெண்கள் மீதான அத்துமீறலே!

இங்கு புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த தமிழர்களின் சாமத்தியச்சடங்கின் புதுமைகளோ மிகக் கேவலம். ஹெலிக்கொப்டரில் ஏறி இறங்குதல் வரை அது நீட்சியடைந்து விட்டது. எங்கள் பண்பாடு, எங்கள் கலாசாரம், எம் மகள், என் காசு என்று ஒரு ஹிந்தி சினிமாவிற்கான படப்பிடிப்புத் தான் அச்சடங்கில் நடத்திக் காட்டப்படுகிறது.தம் போலிப் பெருமைகளுக்காக மகள்களைக் காட்சிப் பொருளாக்கும் பெற்றோருக்கு அய்யோ கேடு!!

-தர்மினி-

தொலைவின் இடைவெளிகளை நிரப்பும் கதைகள்

sathaikal foto

 

              முதன்முதலில் ஆக்காட்டி சஞ்சிகையில் தான் அனோஜன் பாலகிருஷ்ணனின் சிறுகதையொன்றைப் படித்தேன். அதைத் போல சதைகள் சிறுகதைத் தொகுப்பிலுள்ள பத்துக்கதைகளில் அரைவாசிக் கதைகளை சஞ்சிகைகளிலோ இணையத்தளங்களிலோ வாசித்திருந்தேன். ஆனாலும் மீளவுமொரு முறை இத்தொகுப்பில் அவற்றை வாசித்தது சலிப்பைத் தரவில்லை. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு  களங்களாகக் கதைகளை நிகழ்த்தியிருக்கின்றன. அவை சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றன.

திரும்பத் திரும்ப உள்நாட்டு யுத்தம் அதைத் தொடர்ந்து வரும் பிரச்சினைகள், புலம்பெயர்ந்து அகதிகளாக வாழும் நாடுகளில் வாழ்வு எனக் கதைகளைப் படித்துப் படித்து இந்தக் கதை எங்கே எப்படிப் போகப்போகிறது? எப்படி முடியப்போகிறது? என  ஊகிப்பது போல இருப்பது கூட வாசிப்பில் அலுப்பை ஏற்படுத்திவிடுகின்றது. ஆனால், அனோஜனின் எழுத்தில் தற்போதைய சூழலை அதை இளையோர் எதிர்கொள்வதை வாசிக்கலாம். அவை ஒவ்வொன்றும் மனித மனங்களின் ஊடாட்டங்களாக அவர்களை உலைப்பதை மனச்சாட்சியோடு உரையாடுவதைச் சரசரவெனச் சொல்லிக்கொண்டு போகும் இலாவகத்தைக் காணலாம்.

இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து வந்து, திரும்பவும் அங்கு செல்ல முடியாத நிலையிலுள்ளவர்களின் நினைவில் இருக்கும் நாட்டுக்கும் இப்போதிருக்கும் நாட்டின் நிலமைகளுக்கும் பாரிய வேறுபாடு உண்டு. இந்த யதார்த்தத்தை இவை போன்ற கதைகளைப் படிக்கும் போது உணரமுடிகிறது. ‘சதைகள்’ என்ற சொல் பாலியற்தொழிலாளர்களைக் குறிப்பிடுகிறது என்ற தகவலை இத்தொகுப்பையிட்டு எங்கோ நடந்த உரையாடலொன்றில் தான் அறிந்தேன். மறுபுறம், பல வருடங்களின் நாட்டு நிலமைகள் பற்றிய அறிதலின் இடைவெளி  , கற்பனையிலும் தொலைபேசிக் கதைகளாலும் நாட்டுக்கு விடுமுறைகளில் போய்த்திரும்பி வருபவர்களின் கதைகளாலும் தான் நிரம்புகின்றது.

தொகுப்பின் பின்னட்டையில் 1992இல் பிறந்த அனோஜன் என முதலாவது வரியைப் படித்தவுடனே என் மனம் கணக்குப் போடத் தொடங்கியது. 1995இல் நான் யாழ்ப்பாணத்தை விட்டு இடம்பெயர்க்கப்பட்ட போது, அனோஜனுக்கு 3 வயது தானா? அப்படியென்றால் அவர் வளரும் போது எவ்விதமான சூழல் இருந்திருக்கும் என யோசித்தேன்.அவர் அந்நேரம் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தாரா? எங்கு பிறந்து வளர்ந்தார் என்ற விபரம் எனக்குத் தெரியாது. ஆயினும், அவர் எழுதிய கதைகளைப் படித்த போது இக்கால இளைஞர்களின் அகமும் புறமுமான நிலைகளைச் சொல்ல முனைந்த இளம்படைப்பாளியாகத் தெரிகின்றார். மிகக்குறுகிய காலத்தில் ஒரு வித மனவெழுச்சியுடன் எழுதப்பட்டவைகளைத் தொகுப்பாக்கிய புதிய சொல் பதிப்பகத்தின் முயற்சி பாராட்டுக்குரியது.

சாதிய ஏற்றத்தாழ்வு இல்லவேயில்லை என , சாதியால் ஒடுக்குபவர்களின் பிரதிநிதிகள் கத்திக் கொண்டிருக்கும் போது தான் ‘வேறையாக்கள்’ என்ற கதையை அனோஜன் எழுதியிருக்கிறார். ‘நீங்க வேறயாக்கள் நாங்க வேறயாக்கள்…’ எனச் சொல்லும் கதாபாத்திரம் நவீன வாழ்வில் எல்லாம் சரியாகலாம் இரத்தக்கலப்பாகும் விசயமான கல்யாணத்தில் மட்டும் அதைக் கடைப்பிடிப்போம் எனக் கறாராய் சொல்லும் சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கிறார். இன்றுவரை சாதி என்ற விஷம் காற்றில் கலந்துதானிருக்கிறது.

‘அசங்கா’ என்ற சிறுகதை பரவலாக வாசகர்களின் கவனத்தைப் பெற்றுப் பேசப்பட்டது.ஒரு குழந்தையுடன் வாழும் பெண்ணின் துணைவன் வெளிநாட்டில் வாழும் போது , தனித்து வாழும் இளைஞனின் உணர்வுகளை இயல்பாக ஏற்பதும் நட்போடு உறவாடுவதும் நிகழ்கிறது. அசங்காவின் ஆறு வயது மகள் நிமினி அவர்கள் அணைத்திருந்ததைப் பார்த்ததும் இவ்விளைஞனுக்கு ஏற்பட்ட குற்றவுணர்வும் பூனை என்ற மனச்சான்றின் உருவகமும் கதையாக விரிகின்றன. அவர்களிடையில் காதலென்ற ஏமாற்று இருக்கவில்லை. ‘எப்ப உங்க அவர் வாறாராம்?’ என இவன் விசாரிப்பதும், அசங்கா ‘ஊரில அம்மா பொம்பிள பார்த்து முடிச்சுட்டாங்களா?’ என வினவுவதுமாக இயல்பான உரையாடலோடு தான் அவர்களது நட்பு தொடர்கிறது. சில தொடுகைகளுடன் இவ்வுறவை அனுமதிப்பது என்று கதை நகர்கிறது.

மேலுமொரு காதலுக்கோ இன்னொருவர் மீதான ஈர்ப்புக்கோ  துணைவனானவன் வெளிநாடொன்றில் வேலை செய்வது தான் காரணம் என்பதும் கேட்டுப் பழகிப்போன கதை. தொலை தூரத்திலோ வெளிநாட்டிலோ துணை வாழும்போது பெண் இப்படித்தான் நடப்பாள் என்பதும் பொதுப்புத்தி. அதே வேளையில் தனித்து வாழும் இளைஞனுக்கு ஒரு பெண்ணுடனான இது போன்ற உறவு ஒரு பிரச்சனையேயில்லை. ஆனால் அது அவனது மனைவி இன்னொருவனால் இவ்வாறான உறவுக்கு ஆளாகாத வரை தான் அது ஆண்களுக்கு பிரச்சனையில்லாததாயிருக்கும்.

‘பேஸ்புக் காதலி’  கதை சமகாலத்தின் ஒரு முகமாக இருக்கிறது. இரு இணையர்களின் மத்தியில் இரகசியங்களை, தனித்தன்மையை பேணுதல் மற்றும் புலம்பெயர்ந்த பின் பழைய நட்புகளைத் தொடருதலுக்கு அது உதவுவது என உரையாடல்களாக செல்கிறது. தனது துணைவன் பழைய காதலியோடு பேஸ்புக்கில் நட்பாயிருப்பதும் அதை அவன் மறைப்பதும் கோபத்தை ஏற்படுத்துகிறது. இருந்த போதும் மனைவி என்ற இந்தப் பெண், அவன் முகத்தைத் தூக்கி வைத்திருப்பதைப் பொறுக்க முடியாமல், சண்டையின் பின் பழைய மாதிரி இல்லை என மனம் நொந்து ‘எப்பிடியெண்டாலும் இரு. என்னோட அன்பாயிருந்தால் காணும்’ என்ற நிலைக்கு போகிறார். ‘கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன்’ என்ற பழமொழி அவன் தூக்கி உடைத்த லேப்டாப்பை பக்கத்து வீட்டு அங்கிளிடம் கொடுத்து அவளே திருத்திக் கொடுப்பதில் நவீனமாகிறது!

‘சித்தப்பா ஃபமிலி’  நாட்டில் வருசாவருசம் நடக்கும் சம்பவங்களிலொன்றைப் பேசுகிறது. வெளிநாட்டுச் சொந்தக்காரக் குடும்பங்கள் விடுமுறைக்கு நாட்டுக்குப் போவதும் அவர்கள் அங்கு எதை முன்னிட்டு  எவ்விதம் உபசரிக்கப்படுகின்றனர் என்பதும் இலங்கையலிருக்கும் ஒருவரால் எழுதப்படும் போது ஏற்றுக் கொள்ள வேண்டியது தான். பல வருடங்களின் பின் தம்மைத் தேடிவரும் உறவுகளை முந்தைய தலைமுறை ஆவலோடு எதிர்கொள்வதும் தற்போதைய தலைமுறை இடைஞ்சலாக அந்நியமாக உணர்வதும் உண்மை தான்.

ஊரிலிருக்கும் வீடு வளவுகளை விற்றுவிடுவது, சொத்துக்கு ஆசைப்படுவது போன்ற காரணங்களால்  வெறுப்போடு தான் அங்கு இவர்கள் பார்க்கப் படுகிறார்கள். கடன்பட்டும் விடுமுறைக்கு எனக் கஸ்ரப்பட்டு எண்ணியெண்ணிச் சேர்த்த காசை வெளிநாடுகளிலிருந்து போய் விசுக்கிச் செலவழிக்கின்றனர். புலம்பெயர்ந்தவர்களின் அவ்வாறான கொழுப்பேறிய நடவடிக்கைகளைப்  புலத்திலிருப்பவர்கள் எவ்விதம் பார்க்கின்றனர் என விடுமுறைக்குச் செல்பவர்களும் யோசிக்கவேண்டும். ‘வெளிநாட்டில சொகுசாக வாழ்கிறார்கள்’ என்று நினைக்கும்படி படம்காட்டிவிட்டுவருவது இருதரப்புக்கும் நல்லதில்லை.

அனோஜனின் சிறுகதைகளில் பெரும்பாலும் கவனிக்கத்தக்க தொனியாக பாலியல் வேட்கையும் அது பற்றிய மனிதரது ஊசாட்டமும் இழைகளாய் இருக்கின்றன. இவ்வுணர்வுகள் பற்றிய உரையாடலை இக்கதைகள் திறக்குமானால் நல்லதே. ஆபாசம் எனப் பொதுவில் சொல்லப்படும் சம்பவங்களை , வர்ணனைகளைக் கதையோடு கதையாக எளிமையான எழுத்தோட்டத்தில் வாசகர்களிடம் கொடுப்பது நல்ல இனிப்பு மருந்து தான். அதே நேரத்தில் வித்தியாசமான ‘சிவப்பு மழை’ கதையும் உண்டு. சுவாரசியமாகப் புதியதாக வசனங்களை சொற்களைப் படைப்பில் வைக்கும் அனோஜன் சில இடங்களில் காலகாலமாக வாசித்தும் பாவித்தும் அலுத்துப்போன வாக்கியங்களை எழுதியிருப்பதையும் கடினமின்றிக் கண்டு கொள்ளலாம். ‘நான் அப்பா ஆகப்போறனா?’ ‘கண்காட்சியில் காணாமல் போன பையன்’ போன்றவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.

பெரிய உதடுகள்- மார்புகள், உயர்த்திய கால்கள், பெண் குறிக்குக் கண் என்ற குறியீடுமாக அட்டையை வடிவமைத்திருப்பது காமம் சார்ந்த உடலாகப் பெண்ணைப் பார்க்கும் மனங்களின் பிரதிபலிப்பு. வெறும் சதைகளாகப் பெண்களை நோக்குவதன் கண்ணாடி இவ்வட்டை ஓவியம்.

        சதைகள் என்ற இச்சிறுகதைத்தொகுப்பு இலங்கையின் சமகாலத் தமிழ் இலக்கியச் சூழல் உற்சாகமாயிருப்பதன் அடையாளங்களில் ஒன்றெனவும் குறிப்பிடலாம். இனிமேல், அனோஜன் பாலகிருஷ்ணனும் இவர் போன்ற இளம்படைப்பாளிகளும் ஈழத்து இலக்கியத்தை புதிய கதைகளில் புதிய வடிவங்களில் புதிய பார்வைகளில் கொண்டு செல்வர் என நம்புவோம்.
தர்மினி

சதைகள்- சிறுகதைத்தொகுப்பு
அனோஜன் பாலகிரஷ்ணன்
வெளியீடு  : புதிய சொல்
முதற்பதிப்பு : 2016 பெப்ரவரி
விலை :    ரூ300.00
பக்கங்கள் : 134

நன்றி : ஆக்காட்டி 11  (ஏப்ரல்-யூன் 2016)

இரவும் சொற்களும்…

சில நாட்களின் பின்
இரவோடு பேசினேன்
நட்சத்திரங்களை
நிலாவை
நீல முகிற்கூட்டங்களை
வீதி விளக்குகளை
விட்டுவிட்டு வா என்றது
தனிமையும்
கருமையும் கூட்டிக்கொண்டு போன நதி
துாரமில்லை
இருளைத் துளாவி நீந்துகின்றேன்
சினம் பிடித்த சூரியன்
இப்போது
உங்களிடம் முறைப்பாடு செய்யட்டும்.
காமத்தைத் தின்னும் மீன்களை
பசியாற்று!

சிப்பிக்குள்
கடலை வார்த்து விடு!

இக்கடலை மூடி
காடொன்றை வளர்த்துறங்கு!

இரவு சொல்கிறது.
—-
சொற்களை
விதவிதமாய் அனுப்புகின்றேன்
சிதறும் வார்த்தைகளை
ஏந்தும் கைகள்
மாறிக் கொண்டேயிருக்கின்றன.
—-
பொய் என்பது
உண்மையைச் சொல்ல விரும்பாதவர்களின்
மொழித்திறன்
கற்பனைத்திறமை.
—-
இப்போது உறங்கப் போகிறேன்.
கதையிருந்தால்
கனவுக்குள் நுழைந்திடுங்கள்!

ஏழு இந்தியர்கள்

 ABBASPIX3
இன்று உலக புத்தகதினம் என்று ஆளுக்காள் பேஸ்புக்கில் எழுதி, கடைசியாக என்னையும் ஒரு குறிப்பை எழுத வைத்து விட்டார்கள். புத்தகங்கள் பற்றியும் வாசிப்புப் பற்றியும் எழுத எவ்வளவோ விடயங்கள் இருந்தாலும் உடனே ஞாபகத்திற்கு வந்தது ‘ஏழு இந்தியர்கள்’ என்ற நாவல் தான்.அதைப் பற்றி நண்பர்கள் சிலரோடு கதைத்துமிருக்கிறேன்.
   அந்தப் புத்தகத்தைத் திரும்ப வாசிக்க ஆசையாக இருக்கிறதுஎமது ஊரில் இருந்த சிறியதொரு நூல்நிலையம் தான் உலகத்தைப் பார்க்க வழியாயிருந்தது. அப்போது சரித்திர நாவல்கள், வீரகேசரிப் பிரசுரங்கள் என வாசித்துக் கொண்டிருக்கும் போதும் ஏனைய இந்திய மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்புச் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் அவற்றைத் தேடிப் படிக்கத் துாண்டின. நான் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்திருப்பேன் என நினைக்கின்றேன்.
             கே.ஏ.அப்பாஸ் என்ற எழுத்தாளரை அப்போது தான் அறிந்து கொண்டேன். 1914-1987 வரை வாழ்ந்தவர். அவரது சிறுகதைகளும் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆங்கிலம், இந்தி ,உருது ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டவர். சிறந்த பத்திரிகையாளராக இருந்த அதே நேரம்; தயாரிப்பாளராக இயக்குனராக வசனகர்த்தாவாகத் திரைப்படத்துறையிலும் தரமான படைப்புகளைத் தந்தவர்.
இந்நாவல் ‘சாத் இந்துஸ்தானி’ எனத் திரைப்படமாகவும் வெளியாகியது என்ற விபரமும் அப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏழெட்டுத் தடவைகளுக்கு மேலாக அதை நூலகத்தில் சென்று திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருந்தேன்.
அது ஈழத்துக்கான போராட்ட இயக்கங்கள் வளர்ந்து கொண்டிருந்த காலம். பொலிஸ் நிலையங்களைச் சிறு குழுக்களாகச் சென்று தாக்கி அழிப்பது போன்ற விடயங்களை அறிந்து கொண்டிருந்தோம். வீடுகளிலிருந்து இளைஞர்கள் கடிதங்களை எழுதி வைத்துவிட்டு ஆயுதப் பயிற்சிகளுக்காகத் தலைமறைவாகும் காலமாயிருந்தது அது. அக்காலகட்டத்தில் அதே போன்ற கதையொன்றைக்கொண்ட அந்த நாவலைப்படித்தது மனதிற்கு நெருக்கமாகவும் இருந்திருக்கக்கூடும். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் நாட்டின் விடுதலைக்காக ஆயுத வழிப்போராட்டத்தில் நம்பிக்கை வைத்த ஒரு குழுவின் கதை தான் அது. மரியா என்ற கோவாவைச் சேர்ந்த பெண் உட்பட 6 ஆண்கள். ஏழு பேரும் இணைவதும் கூட சுவாரசியமான சம்பவங்களாக இருக்கும். ஒவ்வொருத்தராக இரகசியமாக வந்து சேர்வதும் வித்தியாசமான திறமைகளும் குணங்களுமாயிருப்பார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலத்தவர்கள். ஒன்றிணைந்து திட்டம் போட்டு காடுகளில் அலைந்து ஒன்றாய் கூடி வாழ்ந்து ஒவ்வொரு பொலிஸ் நிலையமாகத் தாக்கி பிரிட்டிஷ் கொடிகளை இறக்கி இந்தியக்கொடிகளை ஏற்றுகிறார்கள்.
அப்போது அவர்களிடையில் நடக்கும் உரையாடல்கள், நட்பு, பிரிவு என கதை செல்லும்.வெவ்வேறு மாநிலத்தவர்களான அவர்கள் அனைவரும் முதலில் சந்தேகங்களுடனும் நெருங்காமலும் இருந்து பின்னர் நல்ல நண்பர்களாகின்றார்கள்.காட்டின் தனிமையில் மரியா என்ற பெண்ணை இளைஞர்களான அவர்கள் பாலியல் கவர்ச்சியுடையவளாக அணுக அடி எடுத்த வைத்த போது மரியா சொல்கிறார் ‘வாருங்கள் அவர்கள் ஒன்பது பேராயிருந்தனர்….”எனத் தொடங்கி பிரிட்டிஷ் பொலிஸார் ஒன்பது பேரால் தான் கூட்டாகப் பாலியல்வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதை விபரிக்கின்றார். அதைக் கேட்ட இளைஞர்கள் தம்மில் ஒரு ஆளாய் அவரை ஏற்றுக்கொண்டு விடுகின்றனர்.மனிதர்களை நேசிக்கச் செய்யும் ஒரு சுதந்திரப் போராட்ட காலக்கதை அவ்வளவு சுவாரசியமாகவும் எளிமையான மொழிபெயர்ப்பாகவும் இருந்தது.
ஏழு இந்தியர்களின் தொடக்கமே ஆறு டாக்ஸிகள் ஒரே நேரத்தில் அந்த மருத்துவமனை வாசலில் வந்து நிற்பதிலிருந்து தான் . அங்கு மரியா உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பார். ஆறு நண்பர்களும் சுதந்திர இந்தியாவில் வெவ்வெறு இடங்களில் தமது சாதாரண வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்குத் தந்திகள் கிடைக்கும்.அந்தத் தந்திகள் அவர்கள் கைகளை அடைவதும் கூட நம்மை அந்தரப்படச் செய்யும் விதமான சம்பவங்களாக கே.ஏ.அப்பாஸ் எழுதியிருப்பார்.
மருத்துவமனையில் உயிர் பிரியும் இறுதிநேரத்தில் மரியாவைச் சந்திக்க வந்து சுற்றி நிற்கும் போது, நடுத்தர வயதைத் தாண்டியவர்களாக உருவங்கள் மாறி நிற்கும் அவர்கள் ஆறு பேரும் தாம் யார் யார் என அடையாளங் காண்பர்கள்.மரியா இறந்து விடுவார். ஒவ்வொரு முறையும் வாசித்து முடிக்கும் போது நானும் அழுவேன்.
இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அந்தப் புத்தகத்தின் சாரமும் சில வசனங்களும் பெயர்களும் மறக்கவில்லை.ஆயினும், திரும்பவும் ஒரு முறை அந்த வாசிப்பனுபவத்தை அடையவேண்டுமென்ற ஆவலும் தீரவில்லை. படிக்க விரும்பும் ஒரு புத்தகமாக அதைத்தேடுகின்றேன்.யாராவது ஏழு இந்தியர்களை வைத்திருந்தால் ஒரு முறை வாசிக்கத் தாருங்கள்.
தர்மினி