le-renouveau-du-feminisme,M56667

-தர்மினி-

ம்பிக்கையானவர்களென்றோ பிடித்தவர்களென்றோ சிலரது பெயர்களை ஒருவர் வரிசைப்படுத்திச் சொல்வது அவரது கருத்து. அதில் இன்னுமொருவர் தலையிட்டு அவரது விருப்பத்தை, நம்பிக்கையைக் குலைப்பது நியாயமல்ல. நாஞ்சில்நாடனவர்கள் சொன்ன படைப்பாளிகளின் எழுத்துகள் அவருக்கு நம்பிக்கையைக் கொடுக்கின்றன. தமிழில் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் இவ்வளவுபேர் மற்றுமொரு எழுத்தாளருக்கு நம்பிக்கையைக் கொடுப்பது ஆரோக்கியம் தான்.

ஆனால், அந்தப் பட்டியலையே திருத்தி எழுதி ஜெயமோகன் பிசத்தியிருக்கிறார். நாம் தமிழிலக்கியத்திற்கு அவநம்பிக்கை தரும் எழுத்தாளர்களில் முந்திக்கொண்டு அவர் பெயரை முன்மொழியலாம். சிலர் சொல்கிறார்கள் ஜெயமோகன் இப்பிடித் தான் இதையெல்லாம் படிக்கக் கூடாதென்று. ஆனால் பலரும் ஜெயமோகனின் பெயரைத் தமக்குப் பிடித்த வரிசையில் முன்வைப்பதைப் பல தடவைகளில் நான் படித்திருக்கிறேன். அவரது எழுத்துகளை பொருட்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகம் என்பதை பரவலாக தமிழிலக்கிய நாட்டுநடப்புகளை அவதானித்தால் ஒரளவு உணரமுடியும்.

சற்றும் தயங்காமல் ‘அவர்களின் பெயரைப் போடக்கூடாது. இவர்களின் பெயரைச் சேர்க்கவேண்டுமென்று’ எழுதியிருக்கிறார். நாஞ்சில்நாடன் என்ற ஒரு எழுத்தாளரின் சொந்தக் கருத்தென்ற நினைப்புக் கூட இல்லை. சரி அவரது தெரிவைப் புறக்கணித்து தானொரு பட்டியல் போடட்டும். போகட்டும்.
ஆனால், ஜெயமோகன் அதற்கான விளக்கம் கொடுப்பது தான் அவரது மனதில் படிந்துபோய்க்கிடக்கும் கசடுகளை மேலும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

இலக்கியம் உள்ள இடமெல்லாம் பட்டியலிடுவது வழமை தானென்கிறார். எந்தப் பட்டியலும் முழுமையானதல்ல என்றும் வளவளத்துக்கொண்டு போய் கடைசியில் தன் கலையைக் காட்டியிருக்கிறார். விடுபட்டவர்களைச் சேர்ப்பதில் பிரச்சனையில்லை. அது அவரது இரசனை. இருக்கட்டும்.
//பட்டியலில் உள்ள ஆண்படைப்பாளிகளில் அனைவரும சிறப்ப்பாக எழுதக்கூடியவர்கள்தான். இன்னும் அதிகமாக அவர்களிடம் எதிர்பார்க்கிறேன். ஆனால் பெண்களில் பலர் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள்.பலரை ஏன் எழுத்தாளர்கள் அல்லது கவிஞர்கள் என்று சொல்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை.

இது ஒரு முக்கியமான அம்சம். இன்று ஆண்கள் எழுதித்தான் நிற்கவேண்டியிருக்கிறது. பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தாலே இடம் கிடைத்துவிடுகிறது. கொஞ்சம் பெண்ணியமும் பீரிட்டால் பெரும்பாலானவர்கள் ‘எதுக்கு வம்பு, காலம்கெட்ட காலத்திலே?’ என்று ஜகாவாங்கிவிடுவார்கள்.//

மேலுள்ள இரு பந்திகளும் ஜெயமோகனின் எழுத்துமூலம். அதிலும் ஓர் எழுத்துப்பிழை ஒரு நாளுக்குள் திருத்தப்பட்டுவிட்டது. இன்னும் மூன்று எழுத்துப் பிழைகளைக் கவனிக்காமல் ( இந்தச் சின்ன இரண்டு பந்திகளிலேயே) விட்டே இந்நியாயத்தீர்ப்பை வழங்கியிருக்கிறார் ஜெயமோகன்.

//ஆண்படைப்பாளிகள் அனைவரும் சிறப்பாக எழுதக் கூடியவர்கள் தான்//என்ற வரியில் தொனிப்பது ஊகத்தொனி. கவனிக்க:   //எழுதக்கூடியவர்கள்//. ஆண்கள் அனைவரிடமும் அதிகமாக எதிர்பார்க்குமளவு திறமை மறைந்து கிடக்கிறதாம். ஒரு கொஞ்சமே வெளிவந்து நம்பிக்கை தரும் எழுத்தாளர்களாகி வரிசைக்குள் நிற்கிறார்களாம். இன்னும் மிச்சம் மீதியை எதிர்பார்க்கிறார் என்பது அவர் விருப்பு. சரி.

ஆனால், //பெண்கள் சொல்லும்படி எதுவுமே எழுதாமல் பலவகை உத்திகள் மூலம் ஊடகப்பிம்பங்களாக ஆனவர்கள்//என்று பெண்படைப்பாளிகளைக் கொச்சைப்படுத்தித் தன் இணையத்தில் எழுதியிருப்பது அவர்களனைவரின் படைப்புகளின் மீதான அவமதிப்பு. அவர்கள் மீதான வசை. இன்னும் சொல்லப்போனால் எல்லாப் பெண்படைப்பாளிகள் மீதான அவரின் பொதுவான கருத்து இது. ஜெயமோகன் ….ஜெயமோகன் என்று ஓடி ஓடி வாசிக்கும் மனிதர்கள் மேல் பரிதாபம் ஏற்படுகிறது. இவர் இப்படி எத்தனையைச் சொன்னாலும் உங்களுக்கு விளங்காதா?

என்னென்ன உத்திகளைப் பயன்படுத்தினார்கள் படைப்பாளிகள் என்ற விளக்கத்தையும் தொடர்ந்து இவரால் எழுதி நியாயப்படுத்த முடியுமா? பெண்களென்றால் வலிமை குன்றியவர்கள் , அறிவு குறைந்தவர்கள், உலகறிவற்றவர்கள் எனப் பிற்போக்குத்தனமாக  எழுதியிருப்பவர் எப்படி நம்பிக்கை தந்த மூத்த படைப்பாளியாக வாசகர்கள் மத்தியில் காணப்பட முடிகிறது?
காலங்காலமாகப் பெண்ணென்றால் தனித்தியங்கவோ சிந்திக்கவோ அதைச் செயற்படுத்த முடியாதவளென்ற எண்ணம் நிலவிவரும் சமூகத்தின் பிரதிபலிப்புத் தான் இப்படியான வார்த்தைகளை எழுதச்செய்திருக்கிறது. ஒரு பெண் திறமையானவளாகப் பளிச்சிட்டால் அவளின் பின்னால் ஒரு ஆணான  துணைவனோ -தகப்பனோ-  தமையனோ-  காதலனோ ஒழிந்திருப்பதாகச் சந்தேகப்படும் சில்லறைத்தனம் போலிது. அவள் பலவகை உத்திகளைக் கையாண்டு தன்னைப் படைப்பாளியாக முன்வைக்கிறாள் என்ற விசர்த்தனம் தமிழிலக்கியத்தை விசமேற்றும் கருத்து. //அவர்களை ஏன் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என்கிறார் நாஞ்சில் என்றே புரியவில்லை //என்ற பசப்பல் வார்த்தைகள் வேறு.
/ஆண்கள் எழுதித்தான் இடம்பிடித்து நிற்கவேண்டியிருக்கிறது.பெண்களுக்கு பெண்களாக தங்களை முன்வைத்தலே இடம் கிடைத்துவிடுகிறது/என்ற ஆழ்ந்த கருத்தின் அர்த்தமென்ன?அத்துடன் பெண்ணியம் என்ற சொல் மீதான வெறுப்பும் பொங்கிக்கொண்டு வருகிறது.

தம்மை இந்த ஆண்படைப்பாளிகள் மத்தியிலும் அவதூறுகள் மத்தியிலும் நிலை நிறுத்தப் பெண்படைப்பாளர்கள் குடும்பத்தினுள்ளிருந்தும் சமூகத்திலிருந்தும் இவர் போன்ற சகஎழுத்தாளர்களிடத்திலிருந்தும் பெரும் போராட்டங்களுடன் தான் தங்களை நிலை நிறுத்துகிறார்கள். பெண்களின் வீறும் வேகமும் இவர் போன்ற பலரையும் பயங்கொள்ளச் செய்கின்றன. அதனால் தான் இவை போன்ற சாட்டுப்போக்குகளைச் சொல்லிப் பெண்களின் கருத்துகளை தூரப்போட்டுவிடுவது நல்லதென்பதாய் தோன்றுகிறது. ஒடுக்கப்பட்டவர்களாகச் சமூகத்தின் விளிம்பில் நின்ற பெண்கள் மையத்துக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதகளிப்புகள் தான் பெண்ணென்ற சலுகையால் ‘குலுக்கி மினுக்கி ‘ வந்திட்டாள் என்ற ரீதியில் பேசச்செய்கின்றது.
பெண்ணியம் என்றால் என்ன? என்ற கேள்விக்குத் திரும்பத் திரும்பப் பதில் சொல்லி  எங்களுக்கு அலுத்துப்போய்ற்றுது. இதெல்லாம் பழைய கேள்விகள் என்று இனியும் யாராவது சொல்லாதீர்கள். ‘பெண்ணியம்’ என்ற சொல் ஜெயமோகன் போன்ற எழுத்தாளரால் நக்கலாக எழுதப்படுகிறதென்றால்,  பேஸ்புக்கில் எவராவது பூப்படத்தையோ பூனைப்படத்தையோ நடிகரொருவரின் படத்தையோ புரொபைலாக வைத்திருக்கும் அனொனியாக வந்து பெண்ணியம் என்றால் என்ன? என்று எங்கேயாவது சம்பந்தமில்லாது கொமன்ட் போடும் போது இனிமேல் கோபப்படக்கூடாது என முடிவெடுத்துள்ளேன்.